புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்




புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அடிப்படை வசதிகள்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் குடிநீர் வசதி மேம்பாடு மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

தமிழக அரசின் மூலம் ஏழை, எளிய பொது மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடும் வகையில் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, சாலை வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இன்றைய (நேற்று) தினம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் குடிநீர் வசதி மேம்பாடு மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் கிராமப்புறங்களில் குடிநீர் வசதி மேம்படுத்துவது குறித்தும், கோடை காலத்தை முன்னிட்டு கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சீமைக்கருவேல மரங்கள்

குறிப்பாக குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளை கண்டறிந்து, கூடுதல் குடிநீர் தொட்டிகள் அமைத்தல், ஆழ்குழாய் கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் பராமரிப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் வேகமாக பரவி வரும் சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை பாதிப்பதோடு, விவசாய நிலங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைக்கிறது. அவற்றை அகற்றும் பணிகளை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற கள ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு, குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பணிகளை முன்னுரிமையுடன் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments