ஆதிபட்டினம் கிராமத்தில் சீராக மின்வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு!



மணமேல்குடி அருகே சீராக மின்வினியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்
மணமேல்குடி அருகே ஆதிபட்டினம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக சீராக மின்வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அடிக்கடி மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள குளிர்சாதன பெட்டி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து வந்தது.

இதுகுறித்து மணமேல்குடி மின்வாரிய அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த மணமேல்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து உறுதியளித்தால் தான் கலைந்து செல்வோம் எனக்கூறி சாலை மறியலை தொடர்ந்தனர். இதனைத்தொடர்ந்து மணமேல்குடி தாசில்தார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், கிராம மக்களுக்கு சீராக மின்வினியோகம் செய்வதாக உறுதியளித்தார்.

இதில், சமாதானம் அடைந்த கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments