புதுக்கோட்டையை சீமைக்கருவேல மரங்களற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும் கலெக்டர் அருணா அறிவுறுத்தல்




புதுக்கோட்டையை சீமைக்கருவேல மரங்களற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அருணா அறிவுறுத்தினார்.

நிலத்தடி நீர்மட்டம்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கிராம ஊராட்சிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிடும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கி கூறியதாவது:-

சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை பெருமளவில் பாதிப்பதோடு, விவசாய நிலங்களின் வளத்தையும் குறைக்கும் தன்மை கொண்டவை. மேலும், இவை சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி பகுதிகளில் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஊராட்சியிலும் தற்போது நடைபெற்று வரும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும்

நீர்நிலைகள், வரத்து கால்வாய்கள், பொதுப்புறம்போக்கு நிலங்கள் மற்றும் அரசு நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை முன்னுரிமை கொடுத்து உடனடியாக அகற்ற வேண்டும். மரங்கள் அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் சீமைக்கருவேல மரங்கள் வளராத வகையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் புதிய மரக்கன்றுகளை நடுதல் போன்ற மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை முடித்து, புதுக்கோட்டையை சீமைக்கருவேலமற்ற மாவட்டமாக மாற்ற முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதிபதி ஆய்வு

இந்தநிலையில், புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில், நகராட்சி நிர்வாக துறையின் சார்பில் நீர்நிலைகளில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட பணிகள் குறித்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) செல்வம், மாவட்ட கலெக்டர் அருணா தலைமையிலான அதிகாரிகள் நேற்று நேரில் ெசன்று ஆய்வு மேற்கொண்டனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த பணிகளின் கீழ், திருக்கோகர்ணம், சேர்வராயன்குளம், அடப்பன்வயல், வெங்கப்பர் ஊரணி மற்றும் அடப்பன்குளம் ஆகிய நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டதின் தன்மை, பரப்பளவு மற்றும் தற்போதைய நிலை குறித்து நீதிபதி கேட்டறிந்தார்.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், சீமைக்கருவேல மரங்கள் வேருடன் அகற்றிய இடங்களில் மீண்டும் அவை வளராமல் இருப்பதைத் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி செயற்பொறியாளர் ரெத்தினவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments