அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.56 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு தொழில் மையம் 3 புதிய டிப்ளமோ பாடப்பிரிவுகள் அறிமுகம்






அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.56 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு தொழில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 3 புதிய டிப்ளமோ பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சிறப்பு தொழில் மையம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், கிராமப்புற மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் நோக்கில் ரூ.56 கோடியில் அதிநவீன ‘சிறப்பு தொழில் மையம்' அமைக்கப்பட்டுள்ளது. தொழில்துறையின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களின் நடைமுறை திறன்களை வளர்த்துக் கொள்ள இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழக அரசு மற்றும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சியின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சிறப்பு தொழில் மையத்தில் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் நிறுவப்பட்டுள்ளன.

அதில் 3 டி பிரிண்டிங் மற்றும் ரோேபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங், இன்டர்நெட் ஆப் திங்ஸ், இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன், பேட்டரி மின்சார வாகன தொழில்நுட்பங்கள் ஆகும். இந்த மையத்திற்கான புதிய கட்டிடம் ரூ.6 கோடி செலவிலும், அங்குள்ள அதிநவீன உபகரணங்கள் மற்றும் வசதிகள் ரூ.50 கோடி செலவிலும் நிறுவப்பட்டு தற்போது திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளன. இந்த சிறப்பு தொழில் மையத்தின் தொடக்கத்தையொட்டி, அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் 3 புதிய டிப்ளமோ பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்பம், ஆட்டோமேஷன் மற்றும் ரோபோட்டிக்ஸ், இன்டர்நெட் ஆப் திங்ஸ் ஆகும்.

மாணவர் சேர்க்கை

இதுகுறித்து கல்லூரி முதல்வர் கூறியதாவது:- தொழில்துறையின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பக்கல்வியை பெறவும், நடைமுறை அனுபவத்தை பெற்று தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. "20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கல்லூரியில் ஏற்கனவே சிவில், கணினி, இ.சி.இ., மெக்கானிக்கல் மற்றும் மாடர்ன் ஆபீஸ் பிராக்டிஸ் ஆகிய 5 பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது கூடுதலாக 3 படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்த பாடப்பிரிவுகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.இதற்கான மாணவர் சேர்க்கை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், மாணவர்களுக்கு தொழில்துறை அனுபவத்தை வழங்குவதற்காக கடந்த ஆண்டு முதல் 6 மாதங்கள் மற்றும் 1 ஆண்டு கால தொழிற்பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் ஆதரவோடு தற்போது இந்த கல்வி நிறுவனத்தில் 22 குளிரூட்டப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் பயன்பாட்டில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments