பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் - மே 11ம் தேதி முதல் 31 வரைபொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், 11ம் தேதி முதல், 31ம் தேதி வரை, 58 மையங்களில் வழங்கப்படும் என, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் அறிவித்தார்.

* 31 கடைசி நாள்:* இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், பிற ஐந்து
இடங்களில் உள்ள அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 58 இடங்களில், வரும் 11 முதல், 31ம் தேதி வரை; காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், விண்ணப்பங்கள்
வழங்கப்படமாட்டாது. எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 250 ரூபாயும்; இதர பிரிவினர், 500 ரூபாயும் கொடுத்து, விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மே 31ம் தேதி, மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இரண்டு லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.

* எத்தனை இடங்கள்:* கடந்த ஆண்டு, 1.10 லட்சம் இடங்கள் பூர்த்தியான நிலையில், 40 ஆயிரம் இடங்கள் கடைசிவரை நிரம்பவில்லை. நடப்பாண்டில், 1.60 லட்சம் இடங்கள் வரை, கவுன்சிலிங்கிற்கு வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த சரியான புள்ளி விவரம், கவுன்சிலிங் துவங்கும்போதுதான் தெரியும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவை குறித்து முடிவு எடுக்கப்படும். அதன்பின், கட்-ஆப் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும். ஒரே மதிப்பெண்களை பல மாணவர்கள் பெற்றிருந்தால், ரேண்டம் மூலம், மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்தப் பணிகள் முடிந்ததும், கவுன்சிலிங் துவங்கும். கடந்த ஆண்டு, ஜூலை 1ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 11ம் தேதி வரை கவுன்சிலிங் நடந்தது. இந்த ஆண்டும், ஜூலை முதல் வாரத்தில் கவுன்சிலிங் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

*அவகாசம் போதுமா?:* கடந்த ஆண்டு, மே 9ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
வெளியானது. 16ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதனால், மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு, போதிய கால அவகாசம் இருந்தது. இந்த ஆண்டு, பல்வேறு குளறுபடிகளால், 22ம் தேதிதான், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

இந்த தேதியில் இருந்து, சரியாக ஒன்பது நாட்களுக்குள், மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பொறியியல் விண்ணப்பங்களில், பாடவாரியாகப் பெற்ற மதிப்பெண் மற்றும் சான்றிதழின் நகலை இணைக்க வேண்டும். ஆகையால், விண்ணப்பங்கள் வழங்குவது மற்றும் பெறுவதற்கான தேதியை, மேலும் சில நாட்களுக்கு நீட்டித்தால், மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது.

Post a Comment

0 Comments