கோபாலபட்டிணத்தை தனி கிராம ஊராட்சியாக அறிவிக்க வேண்டி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்..!



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டினத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்
என்ற கோரிக்கை முன்வைத்து இன்று 01.10.2016 காலை 10.00 மணியளவில் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோபாலபட்டிணத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் வாக்காளர் என சுமார் 400 பேர் திரண்டு வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் பற்றி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் J. முகம்மது யூசுப் அவர்கள் கூறுகையில்:

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சிகளில் மிகவும் பெரிய ஊராட்சியாக நாட்டாணி புரசக்குடி ஊராட்சி உள்ளது. சுமார் 9000 வாக்காளர்களை கொண்ட இவ்வூராட்சி 11 கிராமங்களைக் கொண்டதாகவும், 25 கி.மீ சுற்றளவு உடையதாகவும் உள்ளது. எனவே இதில் உள்ள கோபாலபட்டிணம் கிராமம் அதிகமாக முஸ்லீம் வாக்காளர்களைக் கொண்டதாக உள்ளது (சுமார் 3799). மேலும் கோபாலப்பட்டினத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டி பலமுறை கிராமசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் இது சம்மந்தமான அரசு துறைகளுக்கு மனு அனுப்பப்பட்டும் உள்ளது. ஆனால் இது சம்மந்தமாக அரசு துறை இது வரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் எங்களது வாக்காளர் அடையாள அட்டையை வட்டாட்சியரிடம் ஒப்படைத்து எங்கள் ஊரை தனி ஊராட்சியாக அறிவிக்கும் வரை வரக்கூடிய தேர்தல்களில் யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என கூறினார்.

இதில் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் சமரசம் செய்து மனுக்களை பெற்றுக்கொண்டவுடன் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




Post a Comment