காரைக்குடி அருகே செட்டிநாட்டில் விமான நிலையம் வருவதற்கான வாய்ப்பு



காரைக்குடி: காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் விமான ஓடுதளம் உள்ள நிலையில் இப்பகுதியில் விமான நிலையம் அமைக்க மதுரை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். காரைக்குடி அருகே செட்டிநாடு கால்நடைபண்ணை 1590 ஏக்கரில்  இருவேறு பகுதியாக உள்ளது. காரைக்குடி திருச்சி சாலை அருகேயும், பள்ளத்தூர், கொத்தமங்கலம் சாலையிலும் உள்ளது.
இதில் முதல் பகுதியில் அதாவது காரைக்குடி திருச்சி சாலைக்கு அருகே உள்ள இடத்தில் இரண்டாவது உலகப்போரின் போது அமைக்கப்பட்ட  விமான ஓடுதளம் மிகவும் நல்லமுறையில் உள்ளது. தற்போது மத்திய அரசு உதான் திட்டத்தின்கீழ்  சேலம்,  ஓசூர், கடலூரில் விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.  காரைக்குடி பகுதியை பொறுத்தவரை அழகப்பா பல்கலைக்கழகம், மத்திய மின்வேதியியல் ஆய்வகம், பவர் கிரிட், மத்திய தொழில் பாதுகாப்பு படை, தமிழகத்தில் அதிகஅளவில் அரிசி ஆலை உள்ள பகுதியாக உள்ளது. தவிர இப்பகுதியில் கல்வி நிறுவனங்கள் அதிகஅளவில் உள்ளதால் வெளிநாடுகள், பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக அளவில் மாணவர்கள் படிக்கின்றனர். 

சினிமா படப்பிடிப்புகளும் நடப்பதால்  இப்பகுதி மினி கோடம்பாக்கம் என அழைக்கப்படுகிறது. அத்துடன் சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த  இளைஞர்கள் சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளில் அதிக அளவில் பணிபுரிகின்றனர். இவர்கள் திருச்சி விமான நிலையம் அல்லது மதுரை விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. வளர்ந்து வரும் இப்பகுதியை  கருத்தில் கொண்டு தற்போது உள்ள விமான ஓடுதளத்தை புதுப்பித்து  விமான நிலையம் அமைக்க வேண்டும் என தொழில் வணிகக்கழகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று மதுரை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா துணை மேலாளர் தலைமையில் 3 பேர் கொண்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இவர்கள் விமான ஓடுதளம் உள்பட சுற்றுப்புறப் பகுதிகளை பார்வையிட்டனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்இ ஹஹ மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் மண்டலங்களுக்கு இடையேயான விமானபோக்குவரத்து இணைப்பு திட்டத்தின் கீழ் வேலூர் உள்பட ஒருசில மாவட்டங்களில் விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இப்பகுதியில் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்படும். அதன்பின்பு உயர்அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள்'' என்று தெரிவித்தார்.

Post a Comment