10YearChallenge: 10 ஆண்டுகளில் உலகம் எப்படி மாறியுள்ளது?



நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் எவரோ தற்போது மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கலாம். பிரச்சனை இல்லை.


முதலில் இந்த போக்கில் எந்த தீங்கும் இல்லாத மாதிரிதான் இருந்தது. ஆனால், சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னால் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கும்.

ஏதேனும் தொழில் யோசனையின் ஒரு பகுதியா இது? ஒரு தரவு வங்கி தயாரிப்பதற்காக, உங்கள் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை வேண்டுமென்றே கேட்கிறார்களா? இதற்கு பின் ஏதேனும் சதித்திட்டம் இருக்கிறதா? இதில் இருந்து நாம் தள்ளி இருக்க வேண்டுமா?

பேஸ்புக் கூறுவது என்ன?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை தேடுவதற்கு முன்னால், இதுகுறித்து பேஸ்புக் என்ன கூறியுள்ளது என்று பார்க்கலாம். "இது பயன்பாட்டாளர் ஒருவரால் தொடங்கப்பட்ட மீம். தானாகவே வைரலாகி உள்ளது. இந்த ட்ரென்டை பேஸ்புக் தொடங்கவில்லை" என்கிறது.

"ஏற்கனவே இருக்கும் புகைப்படத்தை வைத்துதான் மீம்கள் செய்யப்படுகின்றன. பேஸ்புக் இதனை எந்த வகையிலும் பயன்படுத்தவில்லை. ஆனால், பேஸ்புக் பயனாளர்கள், முகம் அடையாளப்படுத்தும் தன்மை என்று அறியப்படும் பேஷியல் ரெகக்னிஷன் வசதியை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்."

பேஸ்புக் தெளிவாக கூறியிருக்கிறது. ஆனால், #10YearChallenge குறித்து மட்டுமல்லாமல் சமீபத்தில் இந்த மாதிரியான விளையாட்டுகள் அல்லது மீம்கள் பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கின்றன. இவற்றின் திட்டம் தரவுகளை சேகரிப்பது.

இந்த சவால் ஒரு டைம் பாஸோ அல்லது கேளிக்கையோ இல்லை, இதிலிருந்து விலகி இருப்பதே நல்லது.

இது நாம் அச்சப்பட வேண்டிய விஷயமா?
இதனால் ஏதும் தீங்கு ஏற்படுமா என்று சைபர் சட்ட வல்லுநர் பவன் டக்கலை பிபிசி தொடர்பு கொண்டு பேசியது. ஆம், சைபர் கிரிமினல்கள் இதனை தவறாக பயன்படுத்தலாம்" என்று அவர் தெரிவித்தார்.

10 ஆண்டுகள் பழைய புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்வதால் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், "இந்த புகைப்படங்களை தவறாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இதுவரை ஏதுமில்லை. ஆனால், இவ்வளவு நாட்களாக கிடைத்திராத பழைய புகைப்படம் இப்போது கிடைத்துள்ளது. மக்கள் அவர்களாகவே கொடுக்கின்றனர்" என்றார்.

"இந்த புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் பகிரப்படும்போது, அவற்றை மார்ஃப் செய்து மாற்றலாம், உங்களை இலக்காக ஆக்க முடியும்."

ஆனால், பேஸ்புக் ரெகக்னிஷன் தொழில்நுட்பத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு? "பேஷியல் ரெகக்னிஷன் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை வைத்து 10 ஆண்டுகளில் எந்த அளவிற்கு வடிவம் மாறியுள்ளது என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும்" என்கிறார் டக்கல்

பழைய புகைப்படங்கள் ஏன் ஆபத்தானவை?
இந்த புகைப்படங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது தானே? ஏற்கனவே பேஸ்புக்கில் இருக்கும் புகைப்படம், தற்போது இதனால் என்ன ஆபத்து?

"குறிப்பிட்ட புகைப்படம் பேஸ்புக்கில் ஏற்கனவே இருப்பது உண்மைதான். ஆனால், அது எங்கேயோ இருந்தது. இந்த சவாலை ஏற்று உங்கள் புதிய புகைப்படத்தோடு, பழைய புகைப்படத்தை வைக்கிறீர்கள்."

"இதுபோன்று செய்யும்போது, இதுவரை சமூக வலைதளங்களில் இல்லாத புதிய தரவுகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள். இதனை சைபர் கிரிமினல்கள் தவறாக பயன்படுத்த முடியும்."

"எனவே, இது மாதிரியான சவால்களை தவிர்ப்பது அவசியம். ஏனென்றால், நீங்கள் உங்கள் புகைப்படத்தை பகிரும்போது, நிறுவனங்களுக்கு உங்களது பழைய மற்றும் முக்கியமான தகவல்களை தருகிறீர்கள். மேலும், எந்த அளவிற்கு அவற்றை தவறாக பயன்படுத்த முடியும் என்பதை உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது" என்றார் அவர்.

எந்தெந்த நிறுவனங்கள் இதன் மீது ஒரு கண் வைத்திருக்கின்றன?
டக்கல் மாதிரியான நிபுணர்களின் எச்சரிக்கை ஒருபுறமிருந்தாலும், இது ஒரு சாதாராண படம் தானே. இதை வைத்து நிறுவனங்கள் எவ்வாறு பலனடையமுடியும் மேலும் இதை எப்படி அவர்கள் பயன்படுத்தக்கூடும் என பலருக்கும் சந்தேகம் எழக்கூடும்.

நன்றி: BBC தமிழ் 

Post a Comment