புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கோஆப் டெக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நுலீல் துறை மூலம் இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் பல்வேறு துணி வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அரசு ஊழியர்களுக்கு பண்டிகை நாட்களில் தவணை முறையிலும் துணி விற்பனை செய்யப்பட்டு வந்தது. அறந்தாங்கியில் இயங்கி வரும் கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் 2ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வருவதால், அதை வரும் மார்ச் 31-ந் தேதியுடன் மூட கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது அந்த நிறுவனத்தில் வழக்கமாக துணி எடுப்போரையும் , பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து அறந்தாங்கி வர்த்தக சங்கத் தலைவர் வரதராஜன் கூறியதாவது: அறந்தாங்கியல் சுமார் 50 ஆண்டுகளாக கோஆப்டெக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. தரமான துணிகளை பொதுமக்கள் இங்கு ஆர்வத்துடன் எடுத்து வருகின்றனர். அதே போல அரசு ஊழியர்களும் இங்கு துணிகளை எடுத்து வருகின்றனர். தனியாருடன் போட்டியிட முடியாததால் தமிழகம் முழுதுமே கோஆப்டெக்ஸ் நிறுவனத்தில் விற்பனை குறைந்துள்ளது.
இந்த நிலையில் அறந்தாங்கியில் இயங்கி வரும் கோஆப்டெக்ஸ் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக நட்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டி, அதை மூட கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அறந்தாங்கியில் இயங்கும் கோ ஆப்டெக்ஸ் ஷோரூமை வாடிக்கையாளர்களை கவரும் வகையில், அழகு படுத்தி தேவையான டிசைன்களில் துணிகள் இறக்குமதி செய்து வைக்காமல் இருந்த தாலேயே விற்பனை குறைந்தது.48 ஆண்டுகள் லாபத்தில் இயங்கி 2 ஆண்டுகள் நட்டத்தில் இயங்குவதாலேயே அதை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அறந்தாங்கியில் அரசு சார்பில் செயல்படும் ஒரே துணிக்கடையான கோஆப் டெக்ஸை மூடும் முடிவை அரசு கைவிடவேண்டும் என்றார்.
Source: http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=908594