விரைவில் தஞ்சையில் இருந்து விமான சேவை தொடக்கம் - மத்திய அரசு தகவல்



மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சைக்கு விமான சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்தவுடன் உதான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள சிறு விமான நிலையங்களுக்கு விமான சேவை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத்துக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மூலம் விமான சேவை தொடங்கப்பட்டது. இந்தச் சேவையின் கீழ் தற்போது தஞ்சைக்கு விமான சேவை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூரு - தஞ்சை இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


தஞ்சையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாப்பிள்ளை நாயக்கன்பட்டியில் 30 வருடங்களுக்கு முன்பு விமான நிலையம் ஒன்று இயங்கிவந்தது. அப்போது தஞ்சையிலிருந்து சென்னைக்குச் செல்வதற்காக சிறிய ரக விமானமான வாயுதூத் என்கிற விமான சேவையை மத்திய அரசு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. 


காலப்போக்கில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் இரண்டே ஆண்டுகளில் மத்திய அரசு விமான சேவையை நிறுத்தியது.

இதற்கிடையே, தற்போது தஞ்சை மற்றும் தஞ்சையைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருவது மீண்டும் தஞ்சையில் விமான சேவை தொடங்க வேண்டும் என்பதுதான். மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

நன்றி: விகடன் 

Post a Comment