புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் ரூ.2.21 கோடியில் அகநோக்கிகள் திறப்பு விழா



புதுக்கோட் டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 2.21 கோடி மதிப்பிலான 15 பல்துறை அகநோக்கிகளை மாநில மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சனிக்கிழமை (09/02/2019) இயக்கித் தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தலைமை வகித்தார். மருத்துவகல்லூரி முதன்மையர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார்.

அகநோக்கிகளைத் தொடங்கி வைத்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது:
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து பல்வேறு புதிய மருத்துவ பிரிவுகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தற்போது அரசு மருத்துவக்கல்லூரியில் இரைப்பை பரிசோதனை, பெருங்குடல், பித்தப்பை, கணையம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் ரூ.2 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் பல்துறை சேர்ந்த 15 அகநோக்கிகள் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு தமிழக சுகாதாரத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.12 ஆயிரத்து 563 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் உலக வங்கி நிதியின் கீழ் ரூ.2 ஆயிரத்து 645 கோடியும், ஜப்பான் நாட்டின் ஜெயிக்கா திட்டத்தின் கீழ் ரூ.ஆயிரத்து 645 கோடியும், மத்திய அரசின் நிதியாக ரூ.2 ஆயிரத்து 650 கோடி நிதியும் பெறப்பட்டு உள்ளன. இதன் மூலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நோயைக் கண்டறிவதற்கு அதி நவீன உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே நோயை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது வெள்ளத்தில் செல்லும் வகையில் சோதனை முயற்சியாக ஆம்புலன்ஸ் தயாரிக்க சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெறுகிறது. இந்த ஆம்புலன்ஸ் பயன்பாட்டுக்கு வரும்போது இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்றார். நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ பா. ஆறுமுகம், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment