கஜா புயலில் சாய்ந்த ஆலமரத்துக்கு மீண்டும் புத்துயிர்



புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கரிசக்காடு கிராமத்தில் கஜாபுயலால் சாய்ந்த 200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமைவாய்ந்த ஆலமரத்தை கிராம மக்கள் மற்றும் இளைஞர் அமைப்பினர் வெள்ளிக்கிழமை மீண்டும் நட்டனர் .

கரிசக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அருகிலுள்ள பெருமாள் கோயில் பின்புறத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமைவாய்ந்த ஆலமரம் இருந்தது. பறவைகளின் வாழ்விடமாக இருந்த ஆலரம், கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி வீசிய கஜாபுயலின் போது அடியோடு சாய்ந்து விழுந்தது. இதன் பின்னர் இந்த மரத்தை நடுவதற்கான பல்வேறு நிலைப் பணிகளை மேற்கொண்டனர்.

இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மரம் வளர்ப்போரின் ஆலோசனை பெற்ற கரிசல்காடு கிராம மக்கள்மற்றும் இளந்தென்றல் இளைஞர் அமைப்பினர் ஒன்று கூடி, சாய்ந்து கிடந்த ஆலமரத்தின் கிளை வெட்டி எடுத்து விட்டு, பள்ளம் தோண்டி அடிப்பாகத்தை மட்டும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் வெள்ளிக்கிழமை மீண்டும் நட்டு வைத்தனர்.


கிராம மக்கள், பள்ளிக்குழந்தைகளுக்கு இளைப்பாறும் இடமாகத் திகழ்ந்த இந்த ஆலமரம் மீண்டும் புத்துயிர் பெற்று பழைய நிலையை அடைய வேண்டும் என்றனர் கிராம பொதுமக்கள்.

Post a Comment