புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்களை அளிக்க புகார் பெட்டி அமைப்பு



மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்குப் பதிலாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகளால் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்படும் வாராந்திர மக்கள் குறைகேட்பு, விவசாயிகள் குறைகேட்பு, அம்மா திட்ட முகாம், மனுநீதி நாள் உள்ளிட்ட அனைத்து குறைகேட்பு நிகழ்ச்சிகளும் ரத்த செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனுக்கள் பெட்டி ஒன்று வைக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக குறைகேட்புக் கூட்டங்கள் நடைபெறாது என்றும், பொதுமக்கள் இந்தப் பெட்டியில் தங்களது குறைகளை எழுதி போடலாம் என்றும் வாயிலில் எழுதி ஒட்டப்பட்டது.

திங்கள்கிழமை காலை  ஆட்சியரகம் வந்த சிலர் தங்களது மனுக்களைப் பெட்டியில் போட்டனர். பலரும் இதனைக் கவனிக்காமல் மனுக்களைத் திரும்ப எடுத்துச் சென்றனர். பொதுமக்கள் தங்கள் குறைகளை எழுதி தாராளமாக பெட்டியில் போடலாம், தினமும் மனுக்கள் எடுத்து உரிய துறை அலுவலருக்குப் பிரித்து வழங்கப்படும் என்றும் ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Post a Comment

0 Comments