மீமிசல் அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் எண் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான புதிய வசதி



ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் பணிகள் மீமிசல் தபால் நிலையத்தில் துவங்கியது.

வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்ய, புதிய பான் கார்டு பெற, பாஸ்போர்ட் விண்ணப்பிக்க, வங்கி, பி.எப். கணக்கு, ரேசன் கார்டு உள்ளிட்ட அனைத்திற்கும், ஆதார் எண் அவசியமாகிறது. தமிழகத்தில் 92 சதவீதத்தினர் இதுவரை ஆதார் எண் பெற்றுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர், மொபைல் எண், பெயர், முகவரி, இமெயில் முகவரி உள்ளிட்ட விபரங்களில் பிழைகளோடும், அதில் திருத்தங்கள் செய்யா முடியாமலும் தவித்து வருகின்றனர். இவர்களுக்காகவே, தபால்நிலையங்களிலே ஆதார் திருத்தம் செய்யும் வசதியை தபால்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் திருத்தம் செய்ய மீமிசல் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் இனி சிரமப்பட வேண்டியதில்லை. மேலும் ஆதார் அட்டை திருத்தம் செய்ய விரும்புவோர் அசல் ஆதார் அட்டையை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 31 அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதார் அட்டை புதிதாகப் பெறவும், ஏற்கெனவே பெறப்பட்ட ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் அஞ்சல் துறை சார்பில் 31 இடங்களில் ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம், கிழக்கு, ஆட்சியரகம், பொது அலுவலக வளாகம், ராஜகோபாலபுரம், ராமச்சந்திரபுரம், மீமிசல், கோட்டைப்பட்டிணம், மணமேல்குடி, ராயவரம், திருக்கோகர்ணம், திருமயம், திருப்பெருந்துறை, திருவரங்குளம், வயலோகம், விராலிமலை, ஆலங்குடி, அன்னவாசல், அறந்தாங்கி, அரிமளம், அத்தாணி, கந்தர்வக்கோட்டை,இலுப்பூர், கறம்பக்குடி, கீரமங்கலம், கீரனூர், கீழாநிலை, கொப்பனம்பட்டி, குளத்தூர், பெருங்களூர், பொன்னமராவதி ஆகிய அஞ்சலகங்களில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தங்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றுடன் நேரில் சென்று பயன்பெறலாம்.

Post a Comment

0 Comments