சவூதியில் இறந்த தமிழர் உடல் எஸ்டிபிஐ முயற்சியில் தமிழகம் கொண்டு வரப்பட்டது!



பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அழகாபுரியைச் சேர்ந்தவர் சேதுராஜ் (60). இவருக்கு, மனைவி ஜோதிலட்சுமி, 3 மகன்கள் உள்ளனர். சேதுராஜ் கடந்த 12 ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக தமாம் நகரில் ஒரு வீட்டில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், 2018, டிசம்பர் 26 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்து விட்டாராம். குடும்பத்தினருடன் சேதுராஜுக்கு சுமூக உறவு இல்லாததால், அவரது இறப்பு விவரங்களைத் தெரிவிக்க இயலவில்லையாம்.

இதனால், சேதுராஜ் வேலை பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அங்குள்ள போலீஸுக்கு தகவல் தெரிவித்து, இந்திய தூதரகத்திடம் சேதுராஜ் உடலை ஒப்படைத்துவிட்டனராம்.

எஸ்டிபிஐ கட்சியின் சகோதர அமைப்பான இந்தியன் சோஷியம் போரம் எனும் அமைப்பை இந்திய தூதரகத்தினர் சில வாரங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டு, சேதுராஜ் குடும்பம் குறித்த விரங்களை விசாரித்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டனராம். 

எஸ்டிபிஐ கட்சியின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் 2 வாரத்துக்கு முன்பு, அழகாபுரியில் உள்ள சேதுராஜ் வீட்டை கண்டறிந்து தகவலை தெரிவித்தனர். ஏழ்மை நிலையில் உள்ள அவரது குடும்பத்தினர், சேதுராஜ் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவும்படி எஸ்டிபிஐ கட்சியினரைக் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து, எஸ்டிபிஐ கட்சியினர் ரூ. 60 ஆயிரம் செலவு செய்து, சேதுராஜ் உடலை விமானம் மூலம் வெள்ளிக்கிழமை காலை திருச்சிக்கும், பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் அழகாபுரி கிராமத்துக்கும் கொண்டு வந்தனர். அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, கிறிஸ்தவ முறைப்படி அங்குள்ள கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

2 மாத போராட்டத்துக்குப் பிறகு சேதுராஜ் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து அடக்கம் செய்யும் வரையிலான பணியில், எஸ்டிபிஐ கட்சியின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ரபீக், மாவட்டச் செயலர்கள் முஹம்மது பிலால், ஷாஜகான், மாவட்டப்  பொதுச் செயலர் அப்துல்கனி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது இக்பால், லப்பைக்குடிகாடு நகரத் தலைவர் அஸ்கர் அலி ஆகியோர் ஈடுபட்டனர். 

Post a Comment

0 Comments