முஸ்லிம்களை மறந்த அதிமுக, திமுக?



மக்களவைத் தேர்தல் பணிகள் வேகமெடுகத்துவிட்டன. தேர்தலுக்குத் தயாராகும் வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டன.

இந்த வேட்பாளர் பட்டியலில் இரு அம்சங்களை குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று 'வாரிசு அரசியல்', இரண்டாவது 'முஸ்லிம்' சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கூட இடமளிக்காதது.

வாரிசுகளுக்கு இடம் அளித்தது ஏன்?- முரசொலியில் திமுக விளக்கம்:
இதில் திமுக கூட்டணியில் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி இருக்கிறது என்றாலும், திமுக அறிவித்த 20 இடங்களில் ஒருவர் கூட முஸ்லிம் வேட்பாளர் இல்லை, அதிமுக அறிவித்த 20 இடங்களிலும் இல்லை. பாஜக தான் போட்டியிடும் 5 தொகுதிகளிலும் முஸ்லிம் வேட்பாளர் இருக்கப் போவதும் இல்லை.

ஆனால், இங்கு கேள்வி என்பது தமிழகத்தின் பிரதான கட்சிகளாக இருக்கும் திமுகவும் அதிமுகவும் முஸ்லிம், உள்பட சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகள் முக்கியத்துவம் எனக் கருதும் அதேவேளையில், தாங்கள் அறிவித்த வேட்பாளர்களில் சிறுபான்மை மக்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்கத் தவறிவிட்டனவா என்ற கேள்வி எழுகிறது.

தமிழகத்தில் கணிசமான அளவில் ஏறக்குறைய 6 சதவீதம் அளவில்  இருக்கும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து ஒருவர் கூட முன்னிலைப்படுத்தாதது வேதனைக்குரியது. நாடாளுமன்ற பிரதிநித்துவம் என்பது அனைவரின் பங்களிப்பும், பிரதிநிதித்துவமும் கலந்ததாக இருக்க வேண்டுமே தவிர ஒருசாரரைப் புறக்கணித்து விட்டு செல்வது ஜனநாயகத்துக்கு அழகும் அல்ல, ஆரோக்கியமானதாகும் அல்ல. நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் குரல் எவ்வாறு தமிழகத்தில் இருந்து ஒலிக்கும். ஒரு சாரரைப் புறக்கணித்துவிட்டு செயல்படும் ஜனநாயகம் முழுமையான ஜனநாயகமாக இருக்காது.

சிறுபான்மை மக்களின் நலம் விரும்பிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் முஸ்லிம்களுக்கான இடம் என்பது கூட்டணிக்கட்சி அளவில்தான் என்று இந்தத் தேர்தலில் சுருக்கிக் கொண்டுவிட்டன.

வாரிசு அரசியல்:
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்றார் பாரதி. அதன் அர்த்தம் பெருமை மிகு ஜனநாயக நாட்டில் அனைவருமே மன்னர்கள்தான், அதாவது சரிசமம்தான் என்பதை மிகவும் உயர்வாக மன்னர் என வலியுறுத்தினார் பாரதி.

ஆனால், 17-வது மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் திமுக, அதிமுக, பாமாக, தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளதில் வாரிசு அரசியல் என்ற போக்கு மேலோங்கி இருக்கிறது.

மன்னராட்சியா?
இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக்கொண்டு ஏறக்குறைய 69 ஆண்டுகள் ஆகின்றன குடியரசு ஆட்சிக்கும், மன்னராட்சிக்கும் இடையிலான வித்தியாசமே ஜனநாயகம்தான்.

ஆனால், தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் அரசியல் கட்சிகள் தங்கள் வாரிசுகளை முன்னிறுத்துவதைப் பார்க்கும் போது மீண்டும் மன்னராட்சியின் அம்சங்களைக் கையில் எடுக்கிறார்களா என ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், மன்னராட்சியில்தான் தகுதி இருக்கிறதோ இல்லையோ இந்த மன்னரின் வாரிசுகள் மீண்டும் பொறுப்புக்கு வந்துவிடுவார்கள்.

அதிலும் மாநிலம் தோறும் அரசியல் கட்சிகளில் வாரிசு அரசியல் என்ற போக்கு அதிகரித்து வரும் போக்கு  ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

கடந்த இரு நாட்களுக்கு முன் திமுக, அதிமுக கட்சிகளின் மக்களவை வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில், திமுகவில், வடசென்னையில் ஆற்காடு நா.வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி, தென்சென்னையில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகளும், தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னையில் முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன், வேலூரில் முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகன் மகன் டி.எம்.கதிர் ஆனந்த், கள்ளக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம் சிகாமணி, தூத்துக்குடியில் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

அதிமுகவில், முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியன், அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தேமுதிகவில் சுதிஷ், அமமுகவில் காளிமுத்துவின் மகன், பாமகவில் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் என்று வாரிசுகள் அதிகமாக முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.

ஜெயலலிதா இருக்கும் வரை...
ஜெயலலிதா இருக்கும்வரை திமுகவை வாரிசு அரசியல், குடும்ப ஆட்சி என்று கடுமையாக விமர்சித்து வந்தார். அதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக ஜெயலலிதா கூறிவந்தார். ஆனால், அவர் மறைவுக்குப் பின், அதிமுக சந்திக்கும் மிகப்பெரிய தேர்ததலில் அப்பட்டமாக வாரிசு அரசியல் மேலோங்கி இருப்பது, ஜெயலலிதாவின் கொள்கைளைப் பின்பற்றி நடக்கிறோம் என்று அந்தக் கட்சியினர் கூறும் வார்த்தைகளைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

தட்டிப் பறிக்கப்பட்ட வாய்ப்பு:
இப்போது வாய்ப்பு பெற்றுள்ள வாரிசுகள் அனைவருமே கட்சிக்குள் நீண்டகாலம் உறுப்பினராக இருந்தவர்கள், உழைத்தவர்கள் என்கிற வாதம் வைக்கப்பட்டாலும், அவர்களைக் காட்டிலும் கட்சிக்காக பாடுபட்ட தொண்டர்கள் நிச்சயம் இருப்பார்கள்தானே. அவர்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டார்கள்.

ஆனால், அவர்களைத் தவிர்த்துவிட்டு, இவர்களுக்கு வாய்ப்பும், முன்னுரிமையும் எவ்வாறு கிடைத்தது. கட்சியின் தலைமைக்கு அவர்களின் பெற்றோர் இருக்கும் நெருக்கம், செல்வாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திதான் சீட் பெற்றார்கள் என்பதை மறுக்க இயலாது.

வாரிசு அரசியலை அப்பட்டமாகச் செய்யும்போது தகுதியான தொண்டர்களுக்கும், உண்மையாக உழைத்தவர்களுக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு அங்கு தட்டிப் பறிக்கப்படுவது கண்களுக்குத் தெரியவில்லையா?

எந்த அரசியல் பின்புலம் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த பிரதான கட்சியைச் சேர்ந்த ஒரு இளைஞர் கட்சிக்காக தீவிரமாகப் பணியாற்றிய நிலையில்,  அவர் தன்னுடைய உழைப்புக்கு உரிய அங்கீகாரம், வாய்ப்பு பறிக்கப்பட்டுவிட்டது என்று இப்போது கூறினால் அது நியாயம்தானே.

பணம் சார்ந்த அரசியல்
தேசியம், மொழி சார்ந்த, மாநிலம் சார்ந்த அரசியல், மக்கள் நலன் சார்ந்த அரசியல் ஆகியவை சுதந்திரத்துக்குப் பின் பல்வேறு கால கட்டங்களில்  தாக்கத்தை ஏற்படுத்தி வந்தன. ஆனால், இவை மூன்றும் தேசிய அரசியலிலும் சரி, மாநில அரசியலிலும் தனது வசீகரத்தை இழந்துவிட்டன. இந்தக் கொள்கைகளை சமரசம் செய்து, தேர்தல் வெற்றி ஒன்று மட்டுமே கட்சிகளுக்கு மத்தியில் பிரதானப்படுத்தப்பட்டு வருகிறது.

தேர்தலில் போட்டியிடுவதும், வெற்றி பெறுவதும் நாளுக்குநாள் நமது அரசியலில் பணம் சார்ந்த விஷயமாக மாறி வருவதே வாரிசு அரசியல் கோலோச்சுவதற்கு காரணம். அரசியலில் செய்த முதலீட்டை எடுக்க ஆட்சிக்கு வருபவர்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி பணம் ஈட்டுகிறார்கள்.

அந்தப் பணத்தை இழக்க எந்த அரசியல்வாதியும் தயாராக இல்லை என்பதால்தான், தங்கள் குடும்பத்தாருக்குள்ளேயே அந்தப் பணம் இருக்க வேண்டும் என்பதால்தான் வாரிசு அரசியல் மீண்டும், மீண்டும் முன்வைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த சமூக அமைப்பு அரசியல் என்ற நிலையில் இருந்து கார்ப்பரேட் கம்பெனி அரசியல் நிலைக்கு அரசியல் கட்சிகள் மாறிவிட்டன.

ஏன் வாரிசு அரசியல் முன்வைக்கப்படுகிறது என்று கேட்கும் போது தகுதியான வேட்பாளர்களுக்குத்தான் சீட் கொடுக்கப்பட்டுள்ளது என்று அரசியல் கட்சிகள் விளக்கம் அளித்தாலும், அந்தத் தகுதி எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. பணம் ஒன்று மட்டுமே தேர்தலில் கோடிக்கணக்கில் செலவு செய்ய 'தகுதி'யானவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படுகிறது. கண்துடைப்புக்காக நடத்தப்படும் நேர்காணல், விருப்ப மனு தேவையில்லையே.

மாற்றம் தேவை:
அரசியல் கட்சிகளே வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவு செய்ய பணம் அளித்து, அவர்களின் செலவுகளைக் கண்காணித்து தேர்தலில் பங்கெடுத்தால் மட்டுமே பணத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறை ஒழியும். பணத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறை ஒழிந்தால், வாரிசு அரசியலும் தானாக ஒழிந்துவிடும்.

அதேபோல், ஜனநாயகத்தின் எஜமானர்களான மிஸ்டர் பொதுஜனமும் வாக்கின் வலிமையை உணர்ந்து செயல்பட வேண்டும். தலைவர்களின் தோற்றம், உருவகப்படுத்தும் தன்மை, அரசியல் பிம்பம் ஆகியவற்றைப் பார்த்தும், சிலர் பணத்துக்கும் ஆசைப்பட்டு வாக்களிக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் கொள்கைகள், நிலைப்பாடுகளைக் கவனிப்பதில்லை. அதாவது கட்சிக்காக வாக்களிக்காமல், தலைவருக்காகவே வாக்களிக்கிறார்கள். இந்த நிலையும் மாற வேண்டும்.

வாரிசு அரசியல் தொடர்ந்து தேசிய அரசியலிலும் சரி, மாநில அரசியலிலும் சரி மேலோங்கும் போது, ஆட்சி அதிகாரம் ஒரு சாரரிடமே தொடர்ந்து தக்கவைக்கப்படும், பரவலாக்கப்படாது. ஊழல் அதிகரிக்கும். இதனால், அதிகாரமும், பணமும் ஒரு இடத்தில் குவிந்து சமூகத்தில் சமத்துவமின்மை அதிகரிக்கும் என்பது நிதர்சனம்.

பொதுவாக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் ஜாதி மதம் பார்த்து வாக்களிப்பதில்லை. அந்த நாகரீகத்தை அவர்கள் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள். அதேபோல, எந்த இஸ்லாமிய பிரதிநிதியும் இஸ்லாமியர்களுக்கான பிரதிநிதியாக இருந்தது இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் கட்சிக்கான பிரதிநிநிதியாக மட்டுமே செயல்பட்டுள்ளனர். இது கடந்த கால வரலாறு நமக்கு புகட்டிய பாடம்.

ஆனால் இப்படி இருந்தும்கூட, தேர்தல் சமயங்களில் சிறுபான்மையினரை ஓட்டு வங்கியாக பார்க்கும் அவலம் இன்றும் தொடர்வது வேதனையாக உள்ளது. திமுக, அதிமுக இரு பிரதான கட்சியுமே சிறுபான்மை மக்களின் அதிருப்தியை அறுவடை செய்துவிட்டார்கள். அப்படியானால் இச்சமூகத்தினரின் எதிர்ப்பு ஓட்டுக்கள் நாளை யாருக்கு சாதகமாக அமைய போகிறது ?!

Post a Comment

0 Comments