புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் : வளர்க்க, விற்க தடை கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவிப்பு



உள்ளூர் பாரம்பரிய மீன்களின் மரபியலைக் கெடுக்கும் தன்மை கொண்ட ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை, மீன் வளர்க்கும் விவசாயிகள் கொள்முதல் செய்ய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி எச்சரிக்கைவிடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் பாரம்பரிய மீன் ரகங்களாக இந்தியப் பெருங்கெண்டை வகையில் கட்லா, ரோகு, மிர்கால், சீனப்பெருங்கெண்டை ரகங்களான வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை, சாதா கெண்டை உள்ளிட்ட ரகங்கள் வளர்கின்றன. இவற்றுடன் மரபியல் மேம்படுத்தப்பட்ட திலேப்பியா, கொடுவா ஆகிய மீன் ரகங்கள் அரசின் மீன் வளத்துறை சார்பில் வளர்ப்புக்கென வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், ஆப்பிரிக்க ரக கெண்டை மீன்கள் தற்போது புழக்கத்தில் வந்திருக்கின்றன. இந்த ரக மீன்கள் வளர்ப்புக்கும் விற்பனைக்கும் தடை செய்யப்பட்டவை.

இவை நீர்நிலைகளில் உள்ள நீர் வாழ் உயிரினங்களை, நம்முடைய பாரம்பரிய மீன்களை, முட்டைகளை அதிகளவு உணவாக எடுத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அதேபோல, உள்ளூர் பாரம்பரிய மீன்களுடன் கலந்து இனப்பெருக்கம் செய்தால் மரபியல் மாற்றம் ஏற்பட்டுவிடவும் வாய்ப்புள்ளது.
இதனால் மீன் வளர்க்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டம் விவசாயத்தில் குறிப்பாக மீன் வளர்ப்பிலும் அதிக ஈடுபாடு கொண்ட மாவட்டமாகும்.

எனவே, அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க  ரக கெளுத்தி மீன்களை வாங்கி வளர்க்க வேண்டாம், கொள்முதல் செய்ய வேண்டாம். பொதுமக்கள் வாங்கி உண்ணவும் வேண்டாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Post a Comment

0 Comments