மதிமுக ஒதுங்கியது; மகிழ்ச்சியில் திருநாவுக்கரசர்: காங்கிரஸ் ‘கை’க்கு திருச்சி வருகிறதா?



திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரே ஒரு மக்களவைத் தொகுதியை ஒதுக்கியதன் மூலம்  திருச்சியைக் கைவிட்டது மதிமுக. இதனால் திருநாவுக்கரசருக்கு இருந்த பெரிய பிரச்சினை தீர்ந்ததாக காங்கிரஸ் வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வருவதற்கு சில வாரங்களுக்கு முன் திருநாவுக்கரசரின் தலைவர் பதவி பறிக்கப்பட்டு அவருக்குப் பதில் கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்றார். திருநாவுக்கரசருக்கு கட்சியில் என்ன நிலை என்கிற கேள்வி எழுந்தது.

அவருக்கு நாடாளுமன்றத்தில் இடம் கொடுத்து காங்கிரஸ் வெல்லும் பட்சத்தில் உரிய மரியாதை அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. திருநாவுக்கரசர் காங்கிரஸ் சார்பில் நிற்பதற்கு அவர் நின்ற தொகுதியான புதுக்கோட்டையின் பெரும்பாலன பகுதிகள் தற்போது திருச்சி தொகுதியில் உள்ளது.

திருச்சியில் காங்கிரஸ் கட்சி பலமுறை வென்றுள்ளது. கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிமுகவிடம் வெறும் 4,365 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனது.

2014-ம் ஆண்டு பலரும் பிரிந்து நின்ற நிலையில் மீண்டும் அதிமுக வென்றது. இம்முறை திருச்சியில் காங்கிரஸ் நின்று வெல்லவேண்டும் என நினைக்கிறது. அதற்கு நட்சத்திர வேட்பாளர் திருநாவுக்கரசர்தான் என காங்கிரஸ் வட்டாரத்தில் தகவல் வெளியான நிலையில் மதிமுக திடீரென திருச்சி தொகுதியைக் கேட்க வைகோ அங்கே நிற்பதாகப் பேசப்பட்டது.

இதனால் திருநாவுக்கரசர் சொந்த ஊர் மற்றும் பலமுறை வென்ற அறந்தாங்கி தொகுதி இருக்கும் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடலாம் என திருநாவுக்கரசர் நினைக்க, இம்முறை வேலூர் வேண்டாம் ராமநாதபுரத்தை எங்களுக்குத் தாருங்கள் என முஸ்லீம் லீக் கேட்டதாலும், அந்தத்தொகுதி முஸ்லீம் லீக்குக்கு ஒதுக்க திமுக முடிவு எடுத்துள்ளதாக கூறப்பட்டதாலும் அங்கும் வாய்ப்பு பறிபோனது.

இதனால் திருநாவுக்கரசர் தனிப்பட்ட முறையில் தனக்காக திருச்சி தொகுதியை ஒதுக்கக் கோரி திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்ததாக ஒரு தகவல் காங்கிரஸ் வட்டாரத்தில் வெளியானது. இந்நிலையில் திருநாவுக்கரசருக்கு தோதான தொகுதி கிடைக்காமல் போய்விடும் என்பதால் அவர் போட்டியிட வாய்ப்பில்லை என்கிற கருத்தும் எழுந்தது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டதும், திருச்சியில் வைகோ போட்டியிடவில்லை என்ற தகவலும், மதிமுக தனக்கு கொடுக்கப்பட்ட ஒரு தொகுதியாக ஈரோட்டைக் கேட்க உள்ளது என்கிற தகவலும், திருநாவுக்கரசருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர்.

ஏற்கெனவே 10 தொகுதிகளிலும் வலு உள்ளவர்கள் போட்டியிடவேண்டும், வெல்லவேண்டும் என்று ராகுல் உத்தரவிட்டதன் அடிப்படையில் அடிப்படையில் காங்கிரஸ் கண்டிப்பாக திருச்சியைக் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனக்கு நிச்சயம் திருச்சி தொகுதி கிடைக்கும் என திருநாவுக்கரசர் நம்புவதால் அவர் ரூட் கிளியர் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர்.

Post a Comment

0 Comments