இனி SBI ஏடிஎம்-களில் பணம் எடுக்க டெபிட் கார்டு தேவையில்லை!இந்தியாவிலேயே முதன்முறையாக ஏ.டி.எம் மையத்தில் டெபிட் கார்டு இல்லாமலே பணம் எடுக்கும் அம்சத்தை எஸ்.பி.ஐ அறிமுகம் செய்துள்ளது.


பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ (பாரத் ஸ்டேட் வங்கி), கடந்த 2017 -ம் ஆண்டு யோனோ (Yono App) என்ற டிஜிட்டல் பேங்கிங் சேவையை அறிமுகம்செய்தது.  இந்த செயலிமூலம் எஸ்.பி.ஐ பயனர்கள் டெபிட் கார்டு இல்லாமலே பணம் எடுக்க முடியும்.

பயனர்கள், முதலில் யோனோ கேஷ் (Yono Cash ) மொபைல் அப்ளிகேஷனை டவுண்லோடு செய்ய வேண்டும். பின்னர்,  6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும்.  இதனையடுத்து, பதிவுசெய்த மொபைல் நம்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி உறுதிசெய்யப்படும். உறுதிசெய்யப்பட்டதும், ஏ.டி.எம்-களில் யோனோ கேஷ் செயலியின் எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவுசெய்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ரூ.10,000 வரை மட்டுமே இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எடுக்க முடியும் என்று எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. இந்த பரிவர்த்தனைக்கு ஏ.டி.எம் கார்டு தேவைப்படாது.  

தற்போதைக்கு, இந்த சேவையை டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்க உள்ளதாகவும், அதன் மீதான வரவேற்ப்பை பார்த்துவிட்டு, க்ரெடிட் கார்டுகளுக்கும் இதை விரிவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.இந்தச் சேவை இப்போதைக்கு இந்தியாவில் உள்ள 16,500 ஏ.டி.எம் மையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது YONO-வை 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோக, SBI Anywhere என்ற ஆப்பை ஒரு கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இரண்டு ஆப்களையும் விரைவில் ஒருங்கிணைக்க உள்ளதாக எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments