தமிழகத்தை சேர்ந்த வாகன ஓட்டுநர் குவைத்தில் குத்திக் கொலை: 2 பேர் கைது



தமிழக டிரைவர் குவைத்தில் குத்திக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தெலங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குவைத்தில் உள்ள இஷ்பிலியா பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் 6 பேர் டிரைவர்களாக வேலை பார்த்தனர். அவர் டிரைவர்களுக்கு தனியாக வீடு அமர்த்தி தங்க வைத்துள்ளார். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குமார், தெலங்கானா மாநிலம் இஸ்லாம்பூரைச் சேர்ந்த மொயினுதீன், ஆந்திராவைச் சேர்ந்த இம்ரான் ஆகியோரும் தங்கியுள்ளனர்.

கடந்த 8 மாதங்களாக, இவர்களுக்கும் குமாருக்கும் வாக்குவாதம் நடந்து வந்திருக்கிறது. நேற்று முன் தினம் 3 பேர் வெளியே சென்றுவிட்டனர். குமார், மொயினுதீன், இம்ரான் ஆகியோர் மட்டும் இருந்தனர். அப்போது வழக்கம்போல் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. இதையடுத்து ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் குமாரை கத்தியால் சரமாரியாகக் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் குமார் சரிந்தார்.

இதுபற்றி வீட்டு முதலாளி போலீசுக்குத் தகவல் தெரிவித்தார். உனடியாக அங்கு வந்த அவர்கள், பர்வான்யா மருத்துவமனைக்கு குமாரை கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மொயினுதீன், இம்ரான் கைது செய்யப் பட்டுள்ளனர்.

குவைத் சட்டப்படி, கொலை செய்தால், மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments