புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத் துறை, கடலோர காவல் படை எச்சரிக்கை



புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், கடலுக்குள் சென்றவர்கள் கரைக்குத் திரும்புமாறும் புதுக்கோட்டை மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் மற்றும் மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி முதல் ஏனாதி வரையிலான 32 மீனவ கிராம மக்கள் நாட்டுப்படகு மூலம் மீன்பிடித் தொழில் செய்கின்றனர். இதில் கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாபட்டிணத்தில் மட்டும் விசைப்படகு மூலம் மீன்பிடித் தொழில் நடைபெறுகிறது.

தற்போது மீன்பிடித் தடைகாலம் ஜூன் 15 வரை  என்பதால் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்க மற்றும் வர்ணம் தீட்ட கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.  ஆனால் இந்த தடைக் காலம் என்பது குறைந்த அளவு தொலைவு வரை சென்று மீன்பிடிக்கும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு பொருந்தாது. இதனால் அவர்கள் வழக்கம்போல் தினமும் கடலுக்குச்சென்று மீன்பிடித்து வருகின்றார்கள்.

இந்நிலையில், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் மையம் கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட  கடலோர காவல்படை பாதுகாப்பு குழும ஆய்வாளர் அன்னலெட்சுமி மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் இணைந்து சென்று கட்டுமாவடி முதல் ஏனாதி வரை உள்ள மீனவ கிராமமங்களில்  வானிலை மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்  எனவும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

Post a Comment

0 Comments