பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்: கலெக்டர் உமாமகேஸ்வரி அறிவுறுத்தல்



கோடை காலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித நோய் தொற்றும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி பேசியதாவது:- கோடைகாலம் தொடங்கி உள்ளதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு எவ்வித நோய் தொற்றும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பொது சுகாதாரத்துறையின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகள் திறந்தவுடன் பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிப்பதுடன், ஒவ்வொரு வாரமும் அனைத்து மாணவ-மாணவிகளையும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழியினை தவறாமல் எடுக்க செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வீடுகள், தனியார் கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், நீர் தேங்காமல் பார்த்து கொள்வதுடன், இதுகுறித்து அலுவலர்கள் ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வீடுகள் தோறும் சென்று லார்வா கொசுப்புழு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களுக்கு காய்ச்சல் என்று தெரிந்தவுடன் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நோய்களை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு வழங்கப் படும் குடிநீரினை சுத்தமாக வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து குடிநீர் தொட்டிகளையும் சரியான அளவுகளில் குளோரினேஷன் செய்து வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், அரசு மருத்துவக்கல்லூரி டீன் மீனாட்சிசுந்தரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, இணை இயக்குனர் (ஊரக நலப்பணிகள்) சந்திரசேகரன், பொதுசுகாதார துணை இயக்குனர் பரணிதரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments