அம்மாபட்டினத்தில் `5 லட்சம் செலவுசெய்து கல்யாணம் பண்ணினேன், இதுவரை கணவன் வீட்டுக்கு வரல!' -அதிகாரிகளை அதிரவைத்த பேனர்புதுக்கோட்டை அருகே அம்மாபட்டினத்தில் புதிதாகக் கட்டி திறக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லாததால், கொதிப்படைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 'மெல்ல, மெல்ல விதவையாகும் அம்மாபட்டினம் பேருந்து நிலையம் என்ற வாசகம் அடங்கிய பேனரை வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அம்மாபட்டினம் உள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குப் பிறகு தற்போது, அம்மாபட்டினத்தில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.7 லட்சம் செலவில் பேருந்து நிறுத்தங்கள் கட்டப்பட்டு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனாலும், இந்தப் பேருந்து நிறுத்தங்களில், அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் எதுவும் நிற்பதில்லை என்று பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.


இந்த நிலையில்தான் பேருந்து நிலையம் முன்பு அம்மாபட்டினத்தைச் சேர்ந்தவர்கள் `கணவனைக் காணவில்லை, "5 லட்சம் செலவு செய்து கல்யாணமாகியும் இதுவரை கணவர் வீட்டுக்கு வரவில்லை", "மெல்ல மெல்ல விதவையாகும் பேருந்து நிலையம்-அம்மாபட்டினம் என்று பேனர் வைத்து தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அந்தப் பகுதி வழியாகச் செல்லும் பலரும் ஆச்சர்யத்துடன் இந்தப் பேனரை பார்த்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து அம்மாபட்டினத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது கூறும்போது, "ஈ.சி.ஆர் ரோடு என்பதால், எங்கள் ஊர் வழியாகத் தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் சென்று வருகின்றன. அம்மாபட்டினம் கடைத்தெருவில ஒண்ணு இரண்டு அரசு பஸ்கள் நிற்கும். சில தனியார் பஸ்களும் நிற்கும். ஆனாலும், அங்கு  நிழற்குடை ஏதும் இல்லை.

இதனால், மழையிலும், வெயிலும் சிரமப்பட்டு வந்தோம். நிழற்குடையுடன் பஸ் ஸ்டாப் அமைக்கக் கோரி ரொம்ப வருஷமாகக் கோரிக்கை வச்சிக்கிட்டு இருந்தோம். நீண்ட போராட்டத்துக்கு பிறகு 7 லட்சம் செலவில் அங்கு புதிய நிழற்குடையுடன் பஸ் ஸ்டாப் கட்டி இருக்காங்க. ஆனாலும், அங்கு எந்த பஸ்ஸும் நிற்கிறதில்லை. 59 என்ற டவுன் பஸ் மட்டும்தான் அந்த பஸ் ஸ்டாப் மதித்து நிற்கிறது. பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்கும் என்று காத்திருந்தால், அப்படியே நாள் முழுசும் காத்திருக்க வேண்டியதுதான். எங்க ஊர்ல இருந்து சென்னையில் பலரும் வேலைபார்க்குறாங்க.

சென்னைக்குப் போற பஸ் ஏதும் இங்க நிற்கிறது இல்லை. இதனால, இங்க இருந்து பஸ் பிடித்து, மணமேல்குடி இல்லையின்னா, கோட்டைப்பட்டினம் போய் சென்னைக்கு பஸ் ஏறணும். இதனால, தேவையில்லாத மன உளைச்சல் தான் வரும். இதுபற்றி ஆர்டிஓ, டிஆர்ஓன்னு எல்லா அதிகாரிங்க கிட்டயும் மனு கொடுத்துட்டோம். இதுவரைக்கும் நடவடிக்கை இல்லை. புதுசா பஸ் ஸ்டாப் கட்டியும், மக்களுக்குப் பயன்பாடு இல்லாம இருக்குறதால, தான் கல்யாணமாகியும் கணவனைக் காணவில்லை என்று பேனர் வச்சோம். எங்க ஊர் வழியாகச் செல்லும் எல்லா பஸ்களும் புதுசா கட்டியிருக்க இந்தப் பஸ் ஸ்டாப்ல பொதுமக்களை ஏற்றி, இறக்கணும்" என்றனர்.

Post a Comment

0 Comments