புதுகை மாவட்டத்தில் தேவையான அளவுக்கு விதைகள், உரங்கள் இருப்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்



விவசாயிகளுக்குத் தேவையான அளவுக்கு விதைகள், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
புதுக்கோட்டை மாவட்டத்தின் சராசரி மழையளவு- 805.6 மிமீ. மே மாதம் வரை பெய்ய வேண்டிய சராசரி மழையளவு- 114 மிமீ. ஆனால், நிகழாண்டில் மே வரை பெய்த சராசரி மழையளவு வெறும் 7.35 மிமீ மட்டுமே. மே மாதத்தில் மட்டுமே பெய்ய வேண்டிய சராசரி மழையளவு- 57.7 மிமீ. ஆனால் கடந்த மே மாதத்தில் பெய்த மழை வெறும் 0.40 மிமீ மட்டுமே.

2018-19ஆம்  ஆண்டில் 827 ஹெக்டேர் பரப்பளவில் நெல்லும், 120 ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானியங்களும், 111 ஹெக்டேர் பரப்பளவில் பயறு வகைகளும், 301 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய் வித்துக்களும், 20 ஹெக்டேர் பரப்பளவில் கரும்பும், 10,164 ஹெக்டேர் பரப்பளவில் தென்னையும், 62 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய் பனையும் பயிரிடப்பட்டுள்ளன.

மாவட்டத்திலுள்ள 33 வேளாண் விரிவாக்க மையங்களில் 52.093 மெட்ரிக் டன் நெல் விதைகளும், 15.532 மெட்ரிக் டன் பயறு விதைகளும், 9.866 மெட்ரிக் டன் நிலக்கடலை விதைகளும், 1.73 மெட்ரிக் டன் சிறுதானிய விதைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தேவைக்கேற்ப வாங்கிப் பயன்பெறலாம்.

கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் மாவட்டம் முழுவதும் 3764 மெட்ரிக் டன் யூரியாவும், 1369 மெட்ரிக் டன் டிஏபியும், 1418 மெட்ரிக் டன் பொட்டாஷும், 1765 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் உமாமகேஸ்வரி.

கூட்டத்தின்போது, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் மூலம் 6 விவசாயிகளுக்கு மானிய விலையில் நகரும் காய், கனி விற்பனை வண்டிகள் ரூ. 1.80 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டன.

விவசாயிகளின் கோரிக்கைகள்...
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதன் விவரம்:
ஜி.எஸ். தனபதி: கஜா பாதிப்பின் நிவாரணங்கள் இன்னும் சரிவர வழங்கப்படவில்லை. 6 ஆயிரம் பாசனக் குளங்களில் மராமத்து பணிகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற பணிகளை  மேற்கொள்ள வேண்டும்.

தங்க.கண்ணன்: நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய கோரி 100 கிராமங்களில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன் நிலை என்ன என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டும்.

பி.எஸ். சோமையா: காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம்தான் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நீர்ஆதாரத்தை வழங்கும். எனவே இதனை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கெள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments