புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி கார் சேவை தொடக்கம்



புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வரும்  முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக  பேட்டரி கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 367 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தின்போது, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக பள்ளிகள் அளவில் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய்அலுவலர்  சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மாலதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பேட்டரி கார் இயக்கம் தொடக்கம்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு வாரந்தோறும் மக்கள் குறைகளைத் தெரிவிக்க வரும்போது, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை வாயிலில் இருந்து உள்ளே அழைத்து வரவும், மீண்டும் வாயிலுக்கு அழைத்துச் செல்லவும் வசதியாக பேட்டரி கார் ஒன்று திங்கள்கிழமை இயக்கி வைக்கப்பட்டது. மாவட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இதனை இயக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments