NIA நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு



கடந்த 15/07/2019 திங்கள் மாலை தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் மாநில ஜமாஅத்துல் உலமா தலமையகத்தில் தலைவர் மவ்லானா P.A. ஹாஜா முயீனுத்தீன் ஹஜரத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய அமைப்புகள் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


அதில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

1.நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி- NIA- எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் சமீபகால செயல்பாடுகள் குறித்து கூட்டமைப்பு மிகுந்த கவலை கொள்கிறது. தகுந்த முகாந்திரம் இன்றி, எந்த ஆதாரங்களும் இன்றி முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக்க என் ஐ ஏ செயல்படுவதை கூட்டமைப்பு மிக வன்மையாக கண்டிக்கிறது.

 2. NIA வின் தவறான நடவடிக்கைகளைத்  தொகுத்து தகுந்த தரவுகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் ஆகியோரிடம் கையளிப்பது  எனவும் அவர்கள் பாராளுமன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை உண்மை நிலையை உரத்துச் சொல்ல தேவையான நடவடிக்கைகளை கூட்டமைப்பு  எடுக்கும் என்பதை முஸ்லிம் சமூகத்திற்கு அறியத் தருகிறது.

3. தமிழகத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மீது NIA எடுத்துள்ள தவறான நடவடிக்கைகளுக்காக கூட்டமைப்பு சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதற்காக துறைசார் வல்லுநர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும். அவர்களுடைய ஆலோசனைகள் பெறப்படும். பின்னர் இது குறித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும். மேலும் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு இந்த வழக்கை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இவ் வழக்கை தொடர்ந்து நடத்தி கண்காணிப்பதற்காக  குழு அமைக்கப்பட்டுள்ளது.

4.இந்தியா முழுவதும் நடைபெறும் கும்பல் கொலை என்ற பயங்கரவாதச் செயலை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. அமைதிப் பூங்காவான தமிழகம் இந்தியாவிற்கு முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. எனவே இத்தகைய வன்முறைகள் தமிழகத்தில் நிகழாதிருக்க உச்சநீதிமன்ற அறிவுரைப்படி கும்பல் கொலைக்கு உச்சபட்ச தண்டனை அளிக்கும் சட்டம் ஒன்றை விரைந்து இயற்ற வேண்டுமென தமிழக அரசை கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

  5. நாட்டின் சமூக நீதியையும் தேசிய ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும்  தேசிய கல்விக் கொள்கை 2019 குறித்து கூட்டமைப்பு தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. இதை எதிர்கொள்ளும் முகமாக இன்ன  பிற ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து கூட்டமைப்பின் அனைத்து இயக்கங்களும் களம் காண வேண்டும் என கூட்டமைப்பு வேண்டி கேட்டுக் கொள்கிறது.

என தீர்மானம் நிறைவேற்றபட்டது.

தங்கள் உண்மையுள்ள...
கூட்டமைப்பின் தலைவர்
மௌலானா P. A. காஜா முயீனுத்தீன் பாகவி.

ஒருங்கிணைப்பாளர்கள்...
மௌலானா முஹம்மது மன்சூர் காஷிஃபி காசிமி.
அல்ஹாஜ் பஷீர் அஹ்மத்.

Post a Comment

0 Comments