240 கி.மீ.. 3 மணி நேர மின்னல் பயணம். குழந்தையின் உயிர் காக்க.. அசத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்! ஜாபர் அலி



சென்னையில் ஒரு நாள் சினிமா பட பாணியில், மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட குழந்தையை, தேனியில் இருந்து கோவைக்கு 3 மணி நேரத்தில் கொண்டு சேர்த்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் உயிரை காப்பாற்றி உள்ளார்கள். இவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தசாமி. இவருடைய மனைவி ஆர்த்தி. இந்த தம்பதிக்கு பிறந்து இரண்டு மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது. ஆர்த்தி அண்மையில் தனது தாய் வீட்டுக்கு (தேனிக்கு) வந்துள்ளார்.

இந்நிலையில் குழந்தை மூச்சுவிட சிரமப்பட்டுள்ளான். அவனுக்கு வலிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி உடனே குழந்தையை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

மருத்துவர்கள் அறிவுறுத்தல்

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் பலன் அளிக்ககவில்லை. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவைக்கு இன்குபேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்சில் கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

சதீஷ்குமார் ஏற்பாடு

இதையடுத்து கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து இன்குபேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸை சின்னமனூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் சதீஷ்குமார் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

இதன்படி சதீஷ்குமார் ஏற்பாட்டின் பேரில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கோவை மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

ஜாபர் அலி ஓட்டினார்

குழந்தையை பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவர்கள் அனுப்பிவைத்தனர். ஆம்புலன்ஸை ஓட்டுனர் ஜாபர் அலி ஓட்டிச் சென்றார். இவருடன் பாலக்காடு பகுதியை சேர்ந்த அஸ்வின்சந்த் என்ற மருத்துவ உதவியாளரும் உடன் சென்றனர்.

தகவல் பரவியது

பிற்பகல் 3.15 மணிக்கு ஆம்புலன்ஸ் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டது. செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணம் தாமதம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக வாகனத்தை ஓட்டிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தேனி, திண்டுக்கல் பகுதிகளில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுககு தகவல் தெரிவித்தார். அதன்பிறகு தமிழ்நாடு ஆம்புலன்ஸ் என்ற வாட்ஸ்அப் குழுவில் மிகத்தீவிரமாக பகிரப்பட்டது. பின்னர் இந்த தகவல் சுற்றுலா வாகன டிரைவர்களுக்கான வாட்ஸ் அப் குழுக்களிலும் பகிரப்பட்டது.

போக்குவரத்து சீரமைப்பு

இதைப் பார்த்த திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன டிரைவர்கள் சாலைகளில் ஒரத்தில் நின்றுகொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்தை சீரமைத்த வண்ணம் இருந்தனர்.
 
ஒலிபெருக்கி மூலம் பேச்சு

அத்துடன், ஆங்காங்கே இந்த ஆம்புலன்சுக்கு முன்பாக அந்தந்த பகுதியைச் சேர்ந்த சில ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஒலிபெருக்கி மூலம் குழந்தையின் உயிரை காக்க வழிவிடுமாறு அறிவிப்பு செய்தபடி தடையின்றி செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

போலீசும் உதவினர்

இதற்கிடையே தகவல் அறிந்தது வந்த திருப்பூர், கோவை மாவட்ட காவல்துறையினர், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் ஆம்புலன்சுக்கு முன்பாக பயணம் செய்து குழந்தையின் உயிர் காக்கும் பயணத்துக்கு தடங்கல் ஏற்படாமல் போக்குவரத்தை சீர்படுத்தினர். போக்குவரத்து நெரிசல் மிக்க கோவைக்கு வாகனம் விரைந்து வந்த பின்னர், மொத்த கோவையும் குழந்தைக்கு வழிவிட்டு ஒதுங்கியது. இதனால் கோவை தனியார் மருத்துவமனைக்கு மாலை 6.10 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்தடைந்தது.

சுமார் 240 கிலோமீட்டர் தூரத்தை 2 மணி 55 நிமிடத்தில் கடந்து, உயிருக்கு போராடிய குழந்தையை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜாபர் அலி கொண்டுவந்து சேர்த்தார். குழந்தையை உடனே அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்த மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர். தற்போது அந்த குழந்தை குணமடைந்து பொது வார்டுக்கு மாற்றப்பட்டு நல்ல நிலையில் உள்ளது. குழந்தையின் பெற்றோர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த சதீஷ்குமார் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்களுக்கு நெகிழ்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

வழக்கமாக தேனியில் இருந்து கோவைக்கு செல்ல 5 மணி நேரம் ஆகும். 3 மணி நேரத்திற்குள் குழந்தையை கொண்டு சேர்த்து உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் சுற்றுலா வாகன டிரைவர்கள், காவல்துறையினர் ஒன்றுபட்டு மேற்கொண்ட இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள். சென்னையில் ஒரு நாள் சினிமா பட சினிமாவை மிஞ்சும் இச்சம்பவத்தால் நேற்று தேனி கோவை இடையே சாலைகள் பரபரப்பாக காணப்பட்டது.

Post a Comment

0 Comments