அரசியல் சட்டம் 370வது பிரிவு என்றால் என்ன?



இந்தியாவுடன் காஷ்மீர் இணைவது குறித்து மன்னர் ஹரிசிங் மற்றும் இந்திய அரசாங்கம் இடையே (ஷேக் அப்துல்லா ஒப்புதலுடன்) ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி இராணுவம், வெளி நாட்டு கொள்கை, தகவல் தொடர்பு ஆகிய மூன்று மட்டுமே மத்திய அரசாங்கம் வசம் இருக்கும். மற்ற அனைத்திலும் மாநில அரசாங்கம்தான் முடிவு எடுக்கும் என்பது  ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனை நடைமுறைப்படுத்திட ஏதுவாக ஷேக் அப்துல்லா காஷ்மீர் மாநிலத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசியல் சட்டம் குறித்த விவாதம் அப்பொழுது நடைபெற்று வந்தது. 1949ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி காஷ்மீர் தலைவர்கள் ஷேக் அப்துல்லா, அப்சல் பெய்க், சையத் மசூதி, மோதிராம் பக்டா ஆகிய காஷ்மீர் தலைவர்கள் இந்திய அரசியல் நிர்ணய சபையில் இணைந்தனர். அரசியல் சட்டம் பிரிவு 370 குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் அடிப்படையில் 370வது பிரிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அரசியல் சட்டம் 370வது பிரிவு காஷ்மீர் மாநிலத்திற்கு சில விசேட சலுகைகளை அளித்தது. அவை யாவை?

இந்திய ஒன்றியத்திற்குள் ஜம்மு காஷ்மீர் தனது சொந்த அரசியல் சட்டத்தை இயற்றிக்கொள்வது. ஜம்மு காஷ்மீரில் இந்திய நாடாளுமன்றத்தின் அதிகாரம் இராணுவம், அயல்துறை, தகவல் தொடர்பு ஆகியவற்றில் மட்டுமே அமலாகும். இந்திய அரசாங்கம் வேறு ஏதாவது அதிகாரத்தை செலுத்தலாம். அதற்கு ஜம்மு காஷ்மீர் மாநில அரசாங்கத்தின் இடைக்கால ஒப்புதலும், பின்னர் மாநில அரசியல் நிர்ணய சபையின் இறுதி ஒப்புதலும் தேவை.
370வது பிரிவை ஜனாதிபதி திருத்தவோ அல்லது முற்றிலும் நீக்கவோ செய்யலாம். ஆனால் அதற்கு ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரை தேவை.

காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் நிர்ணய சட்டசபையை அமைப்பதற்கு ஏதுவாக 1951ம் ஆண்டில் முதல் தேர்தல் நடைபெற்றது. இந்திய காஷ்மீர் பகுதியில் மட்டுமே இத்தேர்தல் நடைபெற்றதால் ஐ.நா.சபை இதனை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகக்து. 75 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் ஷேக் அப்துல்லாவின் கட்சி வென்றது. இதில் 73 இடங்களில் ஷேக் அப்துல்லாவின் கட்சியினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதே மாதத்தில் மன்னர் பொறுப்பில் இருந்த கரன்சிங் (ஹரிசிங்கின் புதல்வர்) மாநில அரசியல் நிர்ணய சபையை கூட்டிட அறிவிப்பு வெளியிட்டார்.

ஷேக் அப்துல்லா காஷ்மீரின் பிரதமராக இரண்டு ஆண்டுகள்தான் இருந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்த இரண்டு ஆண்டுகளில் 370வது பிரிவு அளித்த வாய்ப்பை பயன்படுத்தி சில மிகப்பெரிய சாதனைகளை அப்துல்லா அரசாங்கம் அமல்படுத்தியது.

அவை:

சுமார் 4 இலட்சம் ஏக்கர் நிலம் நில உடமையாளர்களிடமிருந்து எவ்வித இழப்பீடுமின்றி பறிக்கப்பட்டு நிலமில்லாத ஏழைகளுக்கு அளிக்கப்பட்டது.

குத்தகை விவசாயிகள் தாம் உழும் நிலத்திலிருந்து வெளியேற்றப்டுவது சட்டவிரோதமாக ஆக்கப்பட்டது.

ஒரு ஏழை தான் வாங்கிய கடனில் ஒன்றரை மடங்கு திருப்பி தந்திருந்தால் அக்கடன் முழுவதுமாக இரத்து செய்யப்பட்டது.

வசதி படைத்த நில உடமையாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மான்யங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் இந்துக்கள் கணிசமாக வாழும் ஜம்மு பகுதிக்கும், பவுத்தர்கள் அதிகமாக வாழும் லடாக் பகுதிக்கும் சுயாட்சி உரிமை வழங்கப்பட்டது. இவை காஷ்மீர் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

காஷ்மீர் முஸ்லிம்கள் மட்டுமல்லாது இந்துக்களும் கூட, குறிப்பாக அடித்தட்டு இந்துக்கள் பயன் பெற்றனர்.

 எனினும் இச்சட்டங்களை எதிர்த்து சங்பரிவார அமைப்பான ஜம்மு பிரஜா பரிஷாத் கலகத்தில் ஈடுபட்டது. நிலச்சீர்திருத்த சட்டங்களை மன்னரின் வாரிசு கரண்சிங் மட்டுமல்லாது சர்தார் பட்டேல் கூட எதிர்த்தனர். ஜம்மு பிரஜா பரிஷாத் “ஒரே தேசம் ஒரே சட்டம்” எனும் முழக்கத்தை முன்வைத்து 370வது பிரிவை நீக்க வேண்டும் எனவும் கிளர்ச்சியில் ஈடுபட்டது. இதன் பின்னணியில் ஷேக் அப்துல்லா பேசியதாக சில உரைகளை காரணம் காட்டி 1953ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 11 ஆண்டுகள் கழித்து 1964ம் ஆண்டு விடுதலை ஆனார். ஆனால் மீண்டும் 1965ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 1975ம் ஆண்டுதான் விடுதலை செய்யப்பட்டார்.

371வது பிரிவும் கரைந்து போன 370வது பிரிவும்

ஷேக் அப்துல்லா சிறையில் இருந்த காலத்தில் காஷ்மீரில் மிகப்பெரிய பாதகமான மாற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. குறிப்பாக 370வது பிரிவு உட்பட காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் புதைக்கப்பட்டன. 370வது பிரிவை நீர்த்து போகவைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவையெல்லாம் செய்யப்பட்டன. காஷ்மீர் மக்களிடமிருந்து இந்திய அரசாங்கம் அந்நியப்படுவதற்கான ஆரம்பம் உருவானது. பின்னாட்களில் இந்த இடைவெளி அதிகமாகியது.

ஆரம்பத்தில் இருந்த 370வது பிரிவு இன்று இல்லை. பெரும்பான்மையான உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன. கீழ்கண்ட விவரங்கள் இதனை தெளிவாக்கும்:

காஷ்மீருக்கு தனி ஜானாதிபதி, தனி பிரதமர், தனி கொடி என்பது நீக்கப்பட்டது.
மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள 97 பிரிவுகளில் 94 பிரிவுகள்
மத்திய மாநில அரசாங்கங்களின் கூட்டு பட்டியலில் உள்ள 47 பிரிவுகளில் 26 பிரிவுகள் அரசியல் சட்டத்தின் 395 பிரிவுகளில் 260 பிரிவுகள்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. எனவே 370வது பிரிவு கணிசமான அளவிற்கு நீர்த்து போய்விட்டது. மீதமுள்ளவற்றையும் நீக்க வேண்டும் என்பதையே சங்பரிவாரம் உட்பட பல அமைப்புகள் கோருகின்றன.

370வது பிரிவு ஜம்மு காஷ்மீருக்கு மட்டுமே தரப்பட்ட நியாயமற்ற சலுகை என பொய்யான பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது போன்ற சலுகை வேறு சில மாநிலங்களுக்கும் தரப்பட்டுள்ளன. குறிப்பாக 371வது பிரிவின் கீழ் சில மாநிலங்களுக்கு விசேட சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில:


  • 371- குஜராத் மற்றும் மகாராஷ்ட்ராவிற்கு மட்டும் பொருந்தும்
  • 371A- நாகாலாந்திற்கு மட்டும் பொருந்தும்.
  • 371B- அசாமிற்கு மட்டும் பொருந்தும்
  • 371C- மணிப்பூருக்கு மட்டும் பொருந்தும்
  • 371D மற்றும் E ஆந்திராவிற்கு மட்டும் பொருந்தும்
  • 371F – சிக்கிமிற்கு மட்டும் பொருந்தும்
  • 371G- மிசோராமுக்கு மட்டும் பொருந்தும்
  • 371H- அருணாசல பிரதேசத்திற்கு மட்டும் பொருந்தும்
  • 371I- கோவாவிற்கு மட்டும் பொருந்தும்

இப்பகுதி மக்களின் நன்மைக்கும் அவர்களது தனிப்பட்ட கலாச்சாரம் பாதுகாக்கப்படவும் இத்தகைய விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. காஷ்மீருக்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டுள்ளது போல தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. அது உண்மை அல்ல.

நன்றி: மார்க்சிஸ்ட் இதழ்

Post a Comment

0 Comments