“பேருந்தில் சில்லறையை சுண்டிவிட்டு திருடும் புதுவித டிப்டாப் ஆசாமிகள்..!!! ”கோவையில் சில்லறை நாணயத்தைச் சுண்டிவிட்டு நகை திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த அவினவ் அப்பகுதியில் நகை பட்டறை வைத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் தனது பட்டறையில் வேலை செய்யும் ரவிச்சந்திரன் (60), என்பவரிடம் நகைகளைக் கொடுத்து சேலத்தில் இருக்கும் நகைக்கடையில் கொடுத்துவிட்டு வரச் சொல்லியிருக்கிறார். அதன்படி, நகைக்கடையில் கொடுத்தது போக மீதம் 116 சவரன் நகையுடன் கோவை திரும்பியுள்ளார் ரவிச்சந்திரன். தனியார் பேருந்தில் வந்துகொண்டிருந்த ரவிச்சந்திரனுக்கு பீளமேடு அருகே பேருந்து வந்த போது தான் வைத்திருந்த நகைகள் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்,கோவை காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ரவிச்சந்திரன் வந்த தனியார் பேருந்திலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் பேருந்து பயணிகளிடம் இந்த கும்பல் நூதன முறையில் திருடி வந்தது தெரியவந்துள்ளது. அதாவது, மூன்று பேர் அமரும் இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் ரவிச்சந்திரன் அமர்ந்திருக்கிறார். அப்போது பேருந்தில் ஏறும் 5 பேர் கொண்ட கும்பல் ரவிச்சந்திரன் முன்னும் பின்னும் அமர்ந்து கொள்கிறது.


இதில் ஒருவர் ரவிச்சந்திரனை நெருக்கியவாறு அமர்ந்துகொள்கிறார். பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் எழுந்து வந்த ரவிச்சந்திரன் தலைக்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிடுகிறார். கீழே விழுந்த நாணயத்தைத் தேடுவது போல் அந்த கும்பல் நடிக்கிறது. ரவிச்சந்திரனும் இருக்கையின் கீழே நாணயத்தைத் தேடுகிறார். அப்போது அவரது பக்கத்தில் அமர்ந்திருந்த திருட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவர் ரவிச்சந்திரனிடம் இருந்த நகை பையை நைசாக எடுத்து தன்னிடம் வைத்துக் கொள்கிறார். பையை எடுத்ததும் அந்த கும்பல் பேருந்திலிருந்து இறங்கிச் சென்றுவிடுகிறது.

இந்தக் காட்சிகளை அடிப்படையாக வைத்துத் தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், முக்கிய குற்றவாளியும் கும்பலின் தலைவனுமான மலைச்சாமி என்பவனை கைது செய்திருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து அந்த கும்பலைச் சேர்ந்த வீரபாண்டி மற்றும் சீனிவாச பாண்டியன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர். இந்த கும்பல், திருடும் நகைகளைக் கட்டிகளாக மாற்றி விற்பனை செய்து வந்துள்ளது, விசாரணையில் மலைச்சாமி மீது தமிழகத்தில் பல்வேறு மாவட்ட காவல்நிலையங்களில் குற்ற வழக்குகள் பதியப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சேலம், கோவை பகுதிகளில் பெரும்பாலான தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பேருந்துகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றால் போலீசார் இந்த காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்கின்றனர் என தனியார் பேருந்து ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும். அக்கம் பக்கத்தில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று கவனித்துக் கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

Post a Comment

0 Comments