உங்க போன்ல இந்த ஆப் இருக்கா? ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட கேம்ஸ்கேனர் ஆப்...



அன்றாட வாழ்வில் ஆண்ட்ராய்டு ஆப்களின் பயன்பாடு தவிர்க்க முடியாதது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாக்கள் தொடங்கி ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற ஷாப்பிங் ஆப்கள் வரை எல்லாமே ஏதோ ஒரு வகையில் நமக்கு பயன்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
அப்படி அதிகம் பயன்படும் ஆப் என ஆண்ட்ராய்டு பயனாளர்களால் பாராட்டப்பட்ட ஓர் ஆப், கேம்ஸ்கேனர். நம்முடைய ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கு ஸ்கேனர்களைப் பயன்படுத்துவதற்குப் பதில், மொபைல் கேமராவையே ஸ்கேனராகப் பயன்படுத்தலாம் என்பதுதான் இதன் கான்செப்ட். மிக எளிமையான பயன்பாட்டாலும் தரத்தாலும் நிறைய பயனாளர்களைப் பெற்றது இந்த ஆப். இந்நிலையில், சமீபத்தில் திடீரென ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது கேம்ஸ்கேனர்.

தெரியாமல் உள்ளே நுழைந்த ஒரு மால்வேரால் புதிய பாதுகாப்பு சிக்கல் ஒன்றை எதிர்கொண்டிருக்கிறது இந்த ஆப். இந்தத் தகவல் வெளியானதையொட்டி, பலரும் இந்த ஆப்பை அன்இன்ஸ்டால் செய்துவிட்டனர். இது மட்டும் போதுமா?

என்னதான் கூகுளே ஸ்கேன் செய்து இந்த ஆப் பாதுகாப்பானதுதான் என சர்ட்டிஃபிகேட் தந்தாலும், கூகுள் ப்ளே ஸ்டோரிலேயே நாம் டவுண்லோடு செய்தாலும், அப்போதும் அந்த ஆப்பை முழுமையாக நம்பமுடியாது என்பதைத்தான் இந்த சம்பவம் உணர்த்தியிருக்கிறது. இது, இப்போது மட்டுமல்ல. இதற்கு முன்பும் பாதுகாப்பு குறைபாடுள்ள, ஆபத்தான பல்வேறு ஆப்கள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் பெரிதாக அறிமுகமற்ற ஆப்கள் என்பதால் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. ஆனால், கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் கேம்ஸ்கேனரே இந்தப் பிரச்னையில் சிக்கியதும், பெரியளவில் கவனம் ஈர்த்திருக்கிறது.

இந்தப் பிரச்னையை முதன்முதலில் அதிகாரபூர்வமாக வெளியே கொண்டுவந்தது பிரபல ஆன்டிவைரஸ் நிறுவனமான கேஸ்பர்ஸ்கீதான். அந்நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள்தான் இந்த ஆப்பில் மால்வேர் ஒன்று சத்தமின்றி அமர்ந்திருப்பதை உறுதிசெய்தனர்.

இந்நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த ஆப்பில் Trojan-Dropper.AndroidOS.Necro.n என்ற மால்வேர் இருப்பதை உறுதிசெய்துள்ளனர். இந்த மால்வேர், பயனாளர்களின் தேவையற்ற தகவல்களையும் ஊடுருவிப் பார்க்க முடியும் என்பதோடு, வேறுசில மால்வேர்களையும் இன்ஸ்டால் செய்ய உதவலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ப்ளே ஸ்டோரிலிருந்து நேற்று முன்தினம் கேம்ஸ்கேனர் நீக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்நிறுவனம், "கேம்ஸ்கேனரில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு உதவும் தேர்டு பார்ட்டி நிறுவனமான Adhub-தான் இதற்குக் காரணம். அந்நிறுவனத்தின்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம். இந்த மால்வேர் காரணமாக, இதுவரை எந்தவொரு தகவலும் கசியவில்லை. இப்போதைக்கு ஆப், ப்ளே ஸ்டோரில் இல்லை. விரைவில் அப்டேட் செய்யப்பட்டு, கேம்ஸ்கேனரின் அப்டேட் வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்னை தெரியவந்ததைத் தொடர்ந்து, பெரும்பாலான பயனாளர்கள் கேம்ஸ்கேனரை அன்இன்ஸ்டால் செய்துவிட்டனர். இந்தப் பிரச்னை, ஆப்பின் 5.11.7 வெர்ஷனில்தான் ரிப்போர்ட் செய்யப்பட்டது. அதற்கு முந்தைய வெர்ஷன்களிலிலும் இந்த சிக்கல் இருந்ததா என்பதுகுறித்து தெளிவாகத் தெரியவில்லை.

இப்போது, இந்த ஆப்பை அன்இன்ஸ்டால் செய்துவிட்டால் மட்டும் போதுமா என்றால், இல்லை. இன்னும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பயனாளர்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.

1. கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் ஆப்களிலேயே இதுபோன்ற சிக்கல்கள் இருக்கின்றன என்றாலும், அதை அவ்வப்போதேனும் கூகுள் கண்டறிந்து, குறிப்பிட்ட ஆப்களை நீக்கிவிடும். இதுவே ப்ளே ஸ்டோருக்கு வெளியே டவுண்லோடு செய்யப்படும் ஆப்கள் என்றால், இன்னுமே சிக்கல்கள் அதிகம். எனவே, உங்கள் மொபைல்களில் இருக்கும் ஆப்கள் பாதுகாப்பானவையா எனத் தெரிந்துகொள்ள கூகுள் ப்ளே ஸ்டோரிலிருக்கும் Play Protect வசதியைப் பயன்படுத்தலாம். மொபைலில் ஆபத்தான ஆப்கள் ஏதேனும் இருந்தால், இது ஸ்கேன் செய்து சொல்லிவிடும். அவற்றை அன்இன்ஸ்டால் செய்துவிடலாம்.

2. இதேபோல அடிக்கடி பயன்படுத்தாத ஆப்கள் இருப்பின் அவற்றையும் அன்இன்ஸ்டால் செய்வது நல்லது. காரணம், அவற்றை அடிக்கடி நாம் அப்டேட் செய்ய மாட்டோம். எனவே, இதுபோன்ற வேறு ஏதேனும் பாதுகாப்பு சிக்கல்கள் இருந்தால், நமக்குத் தெரியாமலேயே பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

3. ப்ளே ஸ்டோரைத் தவிர்த்து வேறு எங்கிருந்தும், குறிப்பாக வாட்ஸ்அப் லிங்க்குகள், ஃபேஸ்புக் லிங்க்குகள் போன்றவற்றிலிருந்து அறிமுகமற்ற ஆப்களை டவுன்லோடு செய்வதைத் தவிர்ப்பது எப்போதும் நல்லது.

Post a Comment

0 Comments