புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பெற விண்ணப்பிக்கலாம்



சம்பா சாகுபடிக்கு வேளாண் இயந்திரங்களை வாடகை மற்றும் மானிய விலையில் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு டிராக்டர் மற்றும் இதர இயந்திரங்கள், கருவிகளை வேளாண் பொறியியல் துறை மூலம் பெற்று பயனடையலாம்.

நிலம் சமன்படுத்துதல், சீரமைத்தல் பணிகளுக்கு நிலமேம்பாட்டுத் திட்ட இயந்திரங்களான புல்டோசர் மணிக்கு ரூ. 840 என்ற வாடகையிலும் மற்றும் உழவுப் பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள டிராக்டர்கள் மணிக்கு ரூ.340 என அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையில் வழங்கப்படுகின்றன.

புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல் பணிகளை மேற்கொள்ள சுழல் விசைத்துளைக் கருவிகள் ஒரு மீட்டருக்கு ரூ.130 வாடகையில் வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்குத் தேவைப்படும் நவீன ரக வேளாண் கருவிகள்,
இயந்திரங்கள் வாங்க 40 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை மானியம் மற்றும் வட்டார, கிராம அளவில் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் சேவை மையங்கள் அமைக்க 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை மானியம் அல்லது நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியத்தில் வேளாண்மை இயந்திரமயமாக்கல் துணை இயக்க திட்ட  நெறிமுறைகளின்படி வழங்கப்படுகிறது.

இவற்றைப் பெற ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகத் தொலைபேசி எண் 04322-221816 அல்லது திருக்கோகர்ணம் உதவி செயற்பொறியாளரை  94432 64168 மற்றும் அறந்தாங்கி உதவி செயற்பொறியாளரை 94421 78763 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Post a Comment

0 Comments