இந்து மீனவர் சடலத்தை சுமந்து இந்து முறைப்படி அடக்கம் செய்த கோட்டைப்பட்டிணம் இஸ்லாமிய இளைஞர்கள்..!!!



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் கடந்த 25/08/2019 அன்று இரவு நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். அந்த நேரத்தில் அவரை அடையாளம் தெரியவில்லை என்றாலும் நள்ளிரவில் அவரைப் பற்றிய தகவல் கிடைத்தது.
அவர், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (47) மீனவர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பிழைப்பிற்காக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் வந்து ஒரு குடிசைப் போட்டு தங்கி மீன்பிடித்து வருகிறார்.

இவருக்கு பரிமளாதேவி (30) என்ற மனைவியும் இவர்களுக்கு ஆர்த்தி, சித்திராதேவி, புஷ்பவள்ளி, சத்தியா ஆகிய 4 பெண் குழந்தைகளும் முருகன் (வயது 1) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

செல்வராஜ் சம்பளத்திற்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்று வரும் வருமானத்தில் குடும்பம் நடந்தது. பரிமளாதேவி வீட்டில் குழந்தைகளை கவனித்துக் கொண்டார்.

இந்நிலையில் தான் கடந்த 25/08/2019 அன்று இரவு கோட்டைப்பட்டினம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் செல்வராஜ்(47) என்பவர் மரணம் அடைந்தார்.


விபத்தில் இறந்த செல்வராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் அறிந்து கதறி அழமட்டும் அவருக்கான சொந்தம் மனைவியும், குழந்தைகளுமே இருந்தனர். சொந்த ஊரிலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு உறவோ, சொத்தோ இல்லை என்று பரிமளாதேவி கண்ணீர் வடித்தார். பிரேதப் பரிசோதனைக்கு ஆகும் செலவுக்கு கூட கையில் பணம் இல்லை என்று குழந்தைகளை கட்டி அணைத்துக் கொண்டு நின்றார். அந்த அளவிற்கு மிகவும் பின்தங்கிய  நிலையில் இருந்தனர்.


இந்த தகவல் அறிந்து வந்த கோட்டைப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இஸ்லாமிய நண்பர்கள் தங்கள் பொறுப்பில்  மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கான அனைத்து உதவிகளும் செய்ததுடன் செல்வராஜ் உடலை மணமேல்குடி பகுதியில் உள்ள பொது மயானத்தில் அவர்களின் வழக்கப்படி இந்து முறைப்படி அடக்கம் செய்தனர்.

அத்தோடு சென்றுவிடவில்லை அந்த இஸ்லாமிய இளைஞர்கள். வறுமையில் 5 குழந்தைகளுடன் வாடும் செல்வராஜின் மனைவிக்காக  அங்கு நின்றவர்கள் முதல் தங்கள் கையில் இருந்ததையும், வீடு வீடாகவும் சென்று சேகரித்த நிதி ரூ. 30 ஆயிரத்தை முதல்கட்டமாக கொடுத்ததுடன் மேலும் அந்த குடும்பத்திற்காக பல தரப்பிலும் நிதி திரட்டி வருகின்றனர். அதில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்ற பாகுபாடின்றி அவர்கள் கையில் இருப்பதை வழங்கி வருகின்றனர்.

மற்றொரு பக்கம் விசைபடகு சங்கத்தினர் வர்த்தக சங்கத்தினர்களும் குடும்பத்தலைவரை இழந்து வறுமையில் வாடும் செல்வராஜ் குடும்பத்திற்காக நிதி திரட்டி வருகிறனர். இந்த சம்பவங்கள் அந்தப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சேவையில் ஈடுபட்டிருந்த அப்பகுதி இஸ்லாமிய இளைஞர்கள்...

எங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருந்து வருகிறோம். இறப்பு என்பது அனைவருக்கும் சமமனாது. இதில் ஜாதி, மத பார்க்க தேவையில்லை . இறந்த செல்வராஜ் குடும்பத்தினர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தனர் மற்றும் சொல்லி கொள்ளும் அளவுக்கு சொந்தங்களும் இல்லை அதனால் அவரை எங்களில் ஒருவராக நினைத்து அவர் பின்பற்றி வந்த இந்து மதம் சார்ந்த சடங்குகளுடன்  அடக்கம் செய்தோம். அவர் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று கூறினார்கள்.

மேலும், எங்கள் ஊரை போலவே மற்ற ஊர்களிலும்  அனைத்து மக்களும் ஜாதி, மத வேறுபாடு பார்க்காமல் ஒன்றுமையாக அண்ணன் தம்பிகளாக சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும். அதற்கு இந்த நிகழ்வு அடிதளமாய் அமையும் என்று நினைக்கின்றோம் என்றனர்.

கிராமங்களில் இன்னும் மனிதம் வாழ்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. எங்கேயும் சகோதரத்துவத்துடன் தான் வாழ்கிறார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் ஒரு சிலரின் லாபத்திற்காக தான் பிரித்து வைத்து பார்க்கிறார்கள். 

Post a Comment

0 Comments