மீமிசல் மற்றும் ஆவுடையார்கோவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள்



ஆவுடையார்கோவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வழங்கப்படுவதாக வேளாண் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து  ஆவுடையார்கோவில் வேளாண் உதவி இயக்குநர் ஜெயபாலன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: ஆவுடையார்கோவில் பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனை பயன்படுத்தி, மண்ணுக்கு தழைச்சத்து, அளிக்கும் சணப்பு மற்றும் தக்கைப்பூண்டு பயிர்களை சாகுபடி செய்து மடக்கி உழவு செய்யலாம். சம்பா பருவத்தில்  மானாவாரியாக நெல்சாகுபடி  மேற்கொள்ள விரும்பும் விவசாயிகள், இப்பகுதிக்கு  ஏற்ற  டி.கே.எம். 13 மேம்படுத்தப்பட்ட சம்பா மசூரி மற்றும் நெல்லூர் மசூரி ஆகிய ரகங்களை விதை கிராமத் திட்டத்தின் மூலம் 50 சதவிகித மானியத்தில் பெற்று விதைக்கலாம்.

மேலும் நெல் நேரடி விதைப்பு செய்யும் விவசாயிகள், விதைப்பு கருவிகளைப் பயன்படுத்தி விதைத்து செயல்விளக்கத்திடல்கள் அமைப்பதன் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ஹெக்டேருக்கு  ரூ.1500 வரை பின்னேற்பு மானியம் பெறலாம்.  இதைத் தவிர,  இயந்திர நடவு செய்து செயல்விளக்கத் திடல்கல் அமைத்தால்  ஹெக்டேருக்கு ரூ.5000 வரை மானியம் பெறலாம்.

எனவே ஆவுடையார்கோவில் பகுதியிலுள்ள விவசாயிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான விதைகள், நுண்சத்து உரங்கள் மற்றும் உயிர் உரங்களை ஆவுடையார்கோவில் மற்றும் மீமிசல் வேளாண் விரிவாக்க அலுவலகங்களில்  பெற்று பயன் அடையலாம்.

Post a Comment

0 Comments