புதுகையில் சுதந்திர தினவிழா கோலாகலம் கலெக்டர் உமா மகேஸ்வரி தேசிய கொடி ஏற்றினார்



புதுக்கோட்டையில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை கலெக்டர் உமா மகேஸ்வரி ஏற்றி வைத்தார்.

இந்தியா முழுவதும் நேற்று 73-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதேபோல புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டு காலை 9.05 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசார், தீயணைப்பு வீரர்கள், என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் உள்ளிட்டோர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு சமாதான புறாக்கள் மற்றும் வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன.

நலத்திட்ட உதவிகள்

பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில், தியாகிகளுக்கு கதர் ஆடைகளை கலெக்டர் அணிவித்தார். பின்னர் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் 120 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 52 ஆயிரத்து 317 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

தொடர்ந்து காவல்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 338 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். மேலும் மழைநீர் சேகரிப்பினை தங்கள் வீட்டில் சிறப்பாக செயல்படுத்தியதை ஊக்கப்படுத்தும் வகையில் கொத்தமங்கலத்தை சேர்ந்த வீரமணி-வனிதா தம்பதியினருக்கு நற்சான்றிதழ் வழங்கி கலெக்டர் பாராட்டினார்.

கண்கவர் கலைநிகழ்ச்சிகள்



பின்னர் 6 பள்ளிகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீர் மேலாண்மை, தேச பக்தி, தூய்மை இந்தியா ஆகிய பல்வேறு மைய கருத்துகளை உள்ளடக்கிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியில் நாட்டுப்பண் பாடப்பட்டு விழா நிறைவுபெற்றது.

இதில் கால்வாய்கள் தூர்வாரும் பணிக்கான கண்காணிப்பு அதிகாரி சிரேயாசிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, வேளாண் இணை இயக்குனர் சுப்பையா, அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு பள்ளிகள்

இதேபோல, புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராணியார் அரசு உயர்நிலைப்பள்ளி, சந்தைப்பேட்டை நகராட்சி நடு நிலைப்பள்ளி, அரசு உயர் தொடக்கப்பள்ளி, பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, பாலன்நகர் தொடக்கப்பள்ளி உள்பட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகம், தீயணைப்பு நிலையம், போலீஸ் நிலையம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுதந்திர தினவிழாவையொட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Post a Comment

0 Comments