புதுகை மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்களில் சொட்டு, தெளிப்புநீர் பாசனம் அமைக்க மானியம்.! கலெக்டர் தகவல்..!!



தோட்டக்கலை பயிர்களில் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கூறியுள்ளார்.
தோட்டக்கலை பயிர்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் பெற்றிட சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலமாக பிரதம மந்திரியின் விவசாய சொட்டுநீர் பாசன திட்டத்தின் கீழ் நடப்பு 2019-20-ம் ஆண்டிற்கு 3,100 எக்டர் பரப்பளவில் ரூ.17 கோடியே 21 லட்சம் பொருள் மற்றும் நிதி இலக்கீடு பெறப்பட்டு தொடர்ந்து விவசாயிகளின் வயல்களின் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில், சிறு விவசாயிகளுக்கு அதிகபட்சம் 5 ஏக்கர் பரப்பளவிலும், குறு விவசாயிகளுக்கு 2.50 ஏக்கர் பரப்பளவிலும் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைத்துதர விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த 100 சதவீத மானியம் தமிழக அரசால் மட்டுமே வழங்கப்படுகிறது.

இதர விவசாயிகளுக்கு அதாவது 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது. ஒரு பயனாளி குடும்பத்திற்கு அதிகபட்சமாக 12.5 ஏக்கர் அதாவது 5 எக்டர் வரை சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது. இந்த திட்டம் மத்திய, மாநில அரசு நிதியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிலமும், நீர் ஆதாரமும் உள்ள விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்திட அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கணினிசிட்டா, நிலத்தின் வரைப்படம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, அடங்கல், மண் மற்றும் தண்ணீர் பகுப்பாய்வு அறிக்கை, நிழற்படம் இரண்டு அளித்து மானிய விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம்.

விவசாயிகள் மேற்கண்ட ஆவணங்களை தங்கள் பகுதி தோட்டக்கலை உதவி இயக்குனர் வாயிலாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாக இணையதள முகவரியில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். நுண்ணீர் பாசன நிறுவனங்களை விவசாயிகள் தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் வசதியும் இணையதளத்தில் உள்ளது. விவசாயிகள் வயல் அமைப்பு மற்றும் மின்மோட்டார் குதிரைதிறன், தண்ணீர் வெளியேற்றும் குழாயின் விட்டம் மற்றும் நீர்ஆதார இருப்பிடத்திற்கும் வயல் அமைந்துள்ள இடத்திற்கும் உள்ள தொலைவு ஆகியவற்றை பொருத்தும், நீர்ஆதாரம் ஆழ்குழாய் கிணறு அல்லது திறந்தவெளி கிணறு என்பதை பொருத்தும் சொட்டு நீர்பாசனம் அமைப்பு நிறுவன பாசன அமைப்பு பாகங்கள் தேவைப்படுகிறது. இதில் அரசால் அனுமதிக்கப்பட்ட பாகங்களுக்குரிய தொகையை தவிர்த்து இதர இனங்களை விவசாயிகள் தொகை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

சொட்டுநீர் பாசனம் அமைப்பதால் அதிக மகசூல் மற்றும் மேலான உற்பத்தித்திறன், முன்னதான முதிர்ச்சி அல்லது முன்னதான அறுவடை, நீர் மற்றும் உர சேமிப்பு வேர் மண்டலங்களில் துல்லியமான நீர் இருப்பதால் நிலத்தை சமன்படுத்தாமல் பயிர்களை வளர செய்கிறது. தாவரத்தின் இலைச்செறிவு வறண்டு காணப்படுவதால் நோய்கள் மற்றும் பூச்சிகளுக்கான தாக்குதல் குறைவு, குறைவான வளர்ச்சி, உழவிற்கான செலவு குறைவு, அதனால் வேலையாட்கள் கூலி செலவினம் குறைவு.

நிலம் மற்றும் நீர்ஆதாரமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைத்து பயன் பெறலாம். எனவே, மின்சார பம்பு வசதியுடன் கூடிய நீர்ஆதாரம் உள்ள அனைத்து விவசாயிகளும் இருக்கும் நீர் ஆதாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தி குறைந்த நேரத்தில் குறைந்த மின்சார பயன்பாட்டில் அதிக பரப்பளவில் பாசனம் செய்திட சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைத்து பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Post a Comment

0 Comments