அறந்தாங்கி ரயில் நிலையத்தில் மின்வயர்கள் திருட்டு மற்றும் மின்விசிறியை உடைத்து சேதம்!



காரைக்குடி-திருவாரூர் மார்க்கத்தில் போதுமான ரயில்கள் இயக்கப்படாததால், கேட்பாரற்று கிடக்கும் அறந்தாங்கி ரயில் நிலையத்தில் சமூக விரோதிகள் மின்விசிறிகளை உடைத்து சேதப்படுத்தியதுடன், மின் வயர்களையும் திருடிச்சென்றுள்ளனர். வணிகத்தில் சிறந்தோங்கிய நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் மேற்கொண்ட முயற்சியால்
காரைக்குடியில் இருந்து சென்னைக்கு சென்றுவர ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூர், கடலூர், சிதம்பரம் வழியாக சென்னைக்கு ரயில் தண்டவாளம் அமைத்து ரயில்போக்குவரத்தை தொடங்கினர். இந்த தண்டவாளம் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் இரண்டு பெரிய பல்கலைக் கழகங்களான (இரண்டும் தற்போது அரசு நிர்வாகத்தில் உள்ளது) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் என இரண்டையும் இணைத்தது.

தமிழகத்தில் மீட்டர்கேஜ் ரயில்பாதைகள் அனைத்தும் அகலரயில்பாதையாக மாற்றம் செய்யப்பட்ட போதிலும், காரைக்குடி-திருவாரூர் ரயில்பாதை மட்டும் இறுதியாக அகல ரயில்பாதையாக மாற்ற நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி அகல ரயில்பாதை பணிக்காக கடந்த நூறு ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த இந்த வழித்தடத்தில் 2012ல் மீட்டர் கேஜ் ரயில்பாதையில் ரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக மீட்டர் கேஜ் ரயில்பாதை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடந்தது.

அறந்தாங்கி உள்ளிட்ட ரயில் நிலையங்களும் புதிதாக கட்டப்பட்டன. அகல ரயில்பாதை அமைக்கும் பணி முடிந்தபோதிலும் காரைக்குடி-திருவாரூர் இடையே 72 கேட் கீப்பர்கள் நியமிக்கப்படாததால், தற்போது ஞாயிறு தவிர மற்ற நாட்களில் டெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் மெதுவாக செல்வதால், ரயிலில் செல்ல பயணிகள் ஆர்வம் காட்டுவதில்லை. ரயில் பெயரளவில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போதுமான ரயில்கள் இயக்கப்படாததால், அறந்தாங்கி ரயில்நிலையத்திலும் பாதுகாப்பு படையினர், தேவையான அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் ரயில்நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. இரவு நேரங்களில் இங்கு வரும் சமூக விரோதிகள் ரயில் நிலையத்தில் உள்ள மின்விசிறிகளை உடைத்து சேதப்படுத்தியதுடன், ரயில் நிலையத்தில் இருந்த மின்வயர்களையும் திருடிச்சென்றுள்ளனர்.

மேலும் ரயில் நிலையத்தின் முன்பு அலங்காரச் செடிகள் வைத்து பராமரிக்க வேண்டிய இடத்தில் அலங்கார செடிகள் நடப்படாததால், அங்கு கள்ளிச்செடி முளைத்துள்ளது. தமிழகத்தில் கள்ளிச்செடியை அபசகுணமாக மக்கள் நினைக்கும் நிலையில் அறந்தாங்கி ரயில் நிலையத்தில் கள்ளிச்செடி பெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: அறந்தாங்கியில் மக்களின் பயன்பாட்டிற்காக பல கோடி ரூபாய் மதிப்பில் ரயில்நிலையம் கட்டப்பட்டாலும், அதை முறையாக பராமரிப்பதில்லை. அலங்கார செடிகள் இருக்க வேண்டிய இடத்தில் கள்ளிச்செடிகள் வளர்ந்துள்ளன. ரயில் நிலையத்தில் இருந்த மின்விசிறிகள் சேதப்படுத்தப்பட்டு, மின்வயர்கள் திருடப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையத்தை யாரும் கண்டுகொள்ளாளததால், அது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்று கூறினர்.

எனவே பயணிகளின் நலனுக்காக அமைக்கப்பட்ட அகலரயில்பாதையில் தேவையான அளவு கேட்கீப்பர்களை நியமித்து, போதுமான ரயில்கள் இயக்கப்பட்டால், ரயில்நிலையம் எப்போதுமே பரபரப்பாக இருக்கும் என்பதாலும் பிளாட்பாரம் டிக்கட் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாலும் சமூக விரோதிகள் ரயில் நிலையத்திற்கு வர மாட்டார்கள். எனவே தெற்கு ரயில்வே உடனடியாக காரைக்குடி-திருவாரூர் மார்க்கத்தில் போதுமான ரயில்களை இயக்கி அறந்தாங்கி ரயில்நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளின் கோரிக்கையாகும்.

நன்றி: தினகரன் நாளிதழ்

Post a Comment

0 Comments