புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ரூ.14 கோடியே 90 லட்சத்தில் குளங்கள் தூர்வாரும் பணி - கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் கண்மாய்கள் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரப்பட்டு வருவதை போன்று நகர்புறங்களில் உள்ள குளங்களும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தூர்வாரப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.

புதுக்கோட்டையில் உள்ள 46 குளங்களில், நகராட்சியின் கட்டுப்பாட்டில் 36 குளங்கள் உள்ளன. புதுக்கோட்டையில் உள்ள குளங்கள் மற்றும் நீர்வரத்து வாரிகள் தூர்வாரப்பட்டு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன.

குளங்களுக்கான பழமை வாய்ந்த வரத்துவாரிகள் கண்டறியப்பட்டு, அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நகராட்சியில் உள்ள அனைத்து குளங்களுக்கும் நகரின் பிற பகுதிகளில் பெய்யும் மழைநீர் வீணாகாமல் நேரடியாக குளங்களை வந்தடையும். இதன்பயனாக தற்போது பெய்துவரும் மழைநீர் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள குளங்களில் முழுவதுமாக சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

தற்போது நகராட்சியில் உள்ள குளங்களை தூர்வாரும் வகையில் 2017-18-ம் நிதியாண்டில் நீர்நிலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை நகராட்சிக்கு ரூ.14 கோடியே 90 லட்சம் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இந்த நிதியின்மூலம் நகராட்சியில் உள்ள காந்தி பூங்கா குளம், குமுந்தான் குளம், புதுஅரண்மனை குளம், மல்லான்குளம், இப்ராம்‌ஷா குளம், பழனியப்பா ஊரணி போன்ற பல்வேறு குளங்களை தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்தி நடைபாதை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல குளங்களுக்கு வரும் நீர்வரத்து வாய்க்கால்களை முழுவதுமாக சிமெண்டு தளங்களாக மாற்றும் பணி செயல்படுத்தப்படுகிறது. மேலும், வரத்துவாரிகள் 5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது.

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள குளங்களுக்கு வரும் 12 மழைநீர் வரத்து வாய்க்கால்கள் 6 ½ கிலோ மீட்டர் நீளத்திற்கு முழுவதுமாக சிமெண்டு தரைத்தளமாக அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. இதனால் மழைநீர் வீணாகாமல் குளங்களுக்கு வரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுதவிர மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments