காரைக்குடி-திருவாரூர் ரயில் சேவை நேரத்தில் மாற்றம்: 16.09.2019 முதல் 29.02.2020 வரை மாற்றப்பட்ட புதிய அட்டவணை..!



காரைக்குடி - திருவாரூர் டெமு ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளதுடன்,  இந்த ரயில் சேவை 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் 6 நாள்கள் (ஞாயிறு தவிர) திருவாரூர் ~ காரைக்குடி மார்க்கத்தில் இயக்கப்படும் டெமு ரயில் சேவை செப்.16 முதல்,  2020, பிப்.29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டு,  புதிய கால அட்டவணையை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி,  திருவாரூரில் அதிகாலை 6 மணிக்கு புறப்படும் டெமு ரயில், பிற்பகல் 12.30-க்கு காரைக்குடி சென்றடையும். பின்னர்,  அங்கிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு திருவாரூர் வந்து சேரும்.
வழக்கமாக, சென்னையிலிருந்து புறப்படும் மன்னை எக்ஸ்பிரஸ் அதிகாலை 3.10 மணிக்கும், காரைக்கால் எக்ஸ்பிரஸ் அதிகாலை 4.25 மணிக்கும் திருவாரூர் ரயில் நிலையம் வந்தடையும். இந்த 2 எக்ஸ்பிரஸ் ரயில்களில்  வரும் பயணிகளில் திருவாரூர்-காரைக்குடி இடையிலுள்ள ரயில் நிலையங்களில் இறங்க வேண்டியவர்கள் திருவாரூரில் இருந்து காலை 6 மணிக்கு காரைக்குடிக்கு புறப்பட்டுச் செல்லும் டெமு ரயில் மூலம் அவரவர் ஊர்களுக்குச் செல்லலாம்.

இதேபோல, சென்னைக்கு செல்ல வேண்டிய காரைக்குடி-திருவாரூர் தடத்திலுள்ள ஊர்களைச் சேர்ந்த பயணிகள், காரைக்குடியிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் டெமு ரயிலில் பயணித்து இரவு 9.15-க்கு திருவாரூர்
சென்றடைவர். பிறகு, இவர்கள் திருவாரூரில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் அல்லது இரவு 11.05 மணிக்கு புறப்படும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் சென்னைக்குச் செல்ல முடியும்.
இதற்காக, சென்னை ~ திருவாரூர் வரை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான கட்டணமும், திருவாரூர் ~ காரைக்குடி வரை பாசஞ்சர் ரயிலுக்கான கட்டணமும் செலுத்தி  டிக்கெட் முன்பதிவு மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

     புறப்படும் இடம்                                         சேரும் இடம்
திருவாரூர் (காலை 6 மணி) - காரைக்குடி (பிற்பகல் 12.30மணி)
காரைக்குடி (பிற்பகல் 2.30)    - திருவாரூர் (இரவு 9.15 மணி)

Post a Comment

0 Comments