366 கி.மீ.. 5 மணி நேர மின்னல் பயணம். சிறுவனின் உயிர் காக்க.. அசத்திய தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவர்! முகமது இஜாஸ்புற்று நோய் பாதித்த சிறுவனின் உயிரை காப்பாற்ற 366 கி.மீ. தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சாதனை படைத்தனர்.

ரத்த தானத்திற்கு முதலில் யோசித்த மக்கள் இன்று உடல் உறுப்பு தானத்தை கூட மனமுவந்து செய்கின்றனர். ஓர் உயிரை காப்பாற்ற தங்கள் சக்திக்கு மிஞ்சிய செயலை கூட செய்யும் மனித நேயம் மக்களிடம் உருவாகி உள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் தண்டு வட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்ற ஆம்புலன்சு டிரைவர்கள் மனித நேயத்துடன் தீவிர முயற்சி எடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

வழக்கமாக 7 1/2 மணி நேரத்தில் கடந்து செல்லும் 366 கி.மீ. தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளனர்.

ராமநாதபுரம் அருகே உள்ள அழகன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நயினாமுகமது. இவரது மகன் முகமது அமீருல் (13). முதுகு தண்டுவட பகுதியில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தான். இடது கால் செயலிழந்து வலி அதிகம் ஏற்பட்டதால் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வீட்டிற்கு அனுப்பப்பட்ட அமீருல், பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான்.

சிறுவனை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ்

அங்கு பரிசோதனை நடத்திய மருத்துவர்கள் உடனடியாக மேல் சிகிச்சை அளிக்க வேண்டும். அதுவும் 8 மணி நேரத்திற்குள், பாண்டிசேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என கூறினர்.

ராமநாதபுரத்தில் இருந்து புதுச்சேரி மருத்துவமனை செல்ல 366 கி.மீ. தூரத்தை கடக்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள்... இது முடியுமா... என பலரும் யோசிக்க... ஆம்புலன்சு டிரைவர்கள் களம் இறங்கினர்.

பாதிப்புக்குள்ளான சிறுவன் அமீருல், ராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து த.மு.மு.க.வுக்கு சொந்தமான ஆம்புலன்சு அமீருல்லை அழைத்துக் கொண்டு புறப்பட்டது. முகமது இஜாஸ் (38) ஆம்புலன்சை ஓட்டிச் சென்றார்.

அவர் சக ஆம்புலன்சு டிரைவர்களுக்கு தகவல் கொடுத்தார். இதன் பயனாக நாகை, காரைக்கால், சீர்காழி, பரங்கிப்பேட்டை என 11 ஊர்களில் ஆம்புலன்சு டிரைவர்கள் ஒன்றிணைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் மக்களை ஒருங்கிணைத்தனர்.

இதனால் அமீருல்லாவை அழைத்துக் கொண்டு சென்ற ஆம்புலன்சு மின்னல் வேகத்தில் சென்றது. இந்த ஆம்புலன்சு வரும் தகவல் பல ஊர்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டதால், பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்தனர்.

இதன் காரணமாக மாலை 6 மணிக்கு புறப்பட்ட ஆம்புலன்சு இரவு 11 மணிக்கெல்லாம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை சென்றடைந்தது.

சுமார் 366 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்து, உயிருக்கு போராடிய சிறுவனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். வழக்கமான வேகத்தில் சென்றால் 7 1/2 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்கள், சிறுவனுக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக ஆம்புலன்சு டிரைவர்கள் மொத்தம் 15 பேர் தங்களின் உயிரை பணயம் வைத்து செயல்பட்டதை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Post a Comment

0 Comments