புதுக்கோட்டை மாவட்டத்தில் 40% குடிமராமத்து பணிகள் நிறைவு



புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப்பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி கூறினார்.

அறந்தாங்கி வட்டத்தில்  முதலமைச்சரின் குடிமராமத்து திட்டப்பணிகளை திங்கள்கிழமை மாலை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 66 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் குளங்கள், ஏரிகள், மற்றும் கண்மாய்கள் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், வரத்து வாய்க்கால்களை சீரமைத்தல்  போன்ற பணிகள் நடைபெறுகின்றன.

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில்  நற்பவளக்குடி கிராமத்தில் உள்ள நற்பவளக்குடி கண்மாயில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

 நற்பவளக்குடி ஏரியில் 3 மதகுகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 மேலும் ஆளப்பிறந்தான் கிராமத்தில் உள்ள ஆளப்பிறந்தான் கண்மாய் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப் பணிகளில் இதுவரை 40 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. மேலும் இம்மாத இறுதிக்குள் இத்திட்டப்பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் உமாசங்கர், அறந்தாங்கி வட்டாட்சியர் பா.சூரியபிரபு, அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவதி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments