முத்துப்பேட்டையில் மளிகை கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி பணத்தை சுருட்டிய வெளிநாட்டு தம்பதி



முத்துப்பேட்டை ஆசாத் நகரில் முகமது சபியுல்லா என்பவர் மொத்த வியாபார மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இங்கு கடந்த 13ஆம் தேதி நில நிற கோட்சூட் மற்றும் சிவப்பு நிற சுடிதார் என டிப்டாப் உடையுடன் சென்ற வெளிநாட்டு தம்பதி பிளேடு ஒன்றை வாங்கியுள்ளது.

அப்போது தாங்கள் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளதாகவும், வெளிநாட்டு பணத்தை எங்கு மாற்ற வேண்டும் என கூறி, கடைக்காரர் சபியுல்லாவிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளனர் வெளிநாட்டு தம்பதியர். இந்திய ரூபாய் நோட்டில் சி.எல் என தொடங்கும் சீரியல் எண் கொண்ட ரூபாய் நோட்டுகள் தங்களுக்கு வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

அதற்கு நீங்கள் கேட்டும் குறிப்பிட்ட ரூபாய் நோட்டு தன்னிடம் இல்லை என பதில் அளித்துள்ளார் சபியுல்லா. இருந்தாலும் விடாத அந்த வெளிநாட்டவர் சி.எல் என தொடங்கும் ரூபாய் நோட்டு இல்லையென்றாலும் பரவாயில்லை, வேறு ஆங்கில எழுத்துகள் தொடங்கும் ரூபாய் நோட்டு இருக்கிறதா என கேட்டுள்ளார். அதோடு நிறுத்திவிடாமல் பணத்தை காட்டுங்கள் தங்களுக்கு தேவையான எண் கொண்ட ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா என தானே தேடி பார்கிறேன் என்றும் ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.

வெள்ளை நிறத்தில் இருப்பவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற வடிவேலு நகைச்சுவை காமெடியை போன்று, வெளிநாட்டவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்று தப்புக் கணக்கு போட்ட கடைக்காரர் சபியுல்லா, 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் பணக்கட்டுகளை வெளிநாட்டவரிடம் கொடுத்துள்ளார்.

இதற்காகவே காத்திருந்த அந்த வெளிநாட்டவர் சபியுல்லாவிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே தனது திருட்டு திறமையை பயன்படுத்தி 30 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சுருட்டியுள்ளார். இதற்கிடையே கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க வந்தவர்களின் கவனத்தை, அவர்களுடன் செல்பி எடுப்பது போன்று திசை திருப்பியுள்ளார் அந்த வெளிநாட்டு பெண்.

அதன் பிறகு இருவரும் சிறிது தூரத்தில் இருந்த காரில் ஏறி தப்பி சென்றுள்ளனர் இவை அனைத்தும் கடையின் சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளது.

வெளிநாட்டு தம்பதியின் இந்த துணிகர கைவரிசை குறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ள போலீசார் வெளிநாட்டு தம்பதி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments