ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது



கோப்புக்காட்சி
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், மீமிசல், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள்.

இந்தநிலையில் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலவலக அனுமதியுடன் 80 விசைப்படகுகளில் 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த விஜயேந்திரன் (வயது 48) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் மற்றும் ராமு (49), சின்னையன் (40), ஜேசு (39) உள்பட 5 பேர் சென்றனர். அவர்கள் 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் வந்தது. அதிலிருந்த கடற்படையினர், இது இலங்கைக்கு சொந்தமான கடல் பரப்பு, இந்த பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பலமுறை எச்சரித்தும் நீங்கள் ஏன் இங்கு மீன் பிடிக்கிறீர்கள் என்று கேட்டனர்.

பின்னர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி அந்த படகில் இருந்த மீனவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் படகில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலையுயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்ட இலங்கை கடற்படையினர் படகையும் சிறைப்பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

அங்குள்ள காங்கேசன் துறைமுகம் அலுவலகத்தில் தங்க வைப்பட்ட மீனவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரிய வரும்.

நேற்று இலங்கை சிறையில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 2 மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் 5 மீனவர்களை கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நன்றி: மாலைமலர்

Post a Comment

0 Comments