அறந்தாங்கியில் அரசு சார்பில் 687 பயனாளிகளுக்கு ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி.!!



புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் கடந்த (22.09.2019) வழங்கினார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி அவர்கள் தலைமையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் திரு. பி.கே.வைரமுத்து அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இதன்படி பொதுமக்களுக்கு பல்வேறு அரசு துறைகளின் சார்பில் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் வருவாய்த்துறையின் சார்பில் 118 பயனாளிகளுக்கு ரூ.34,64,415 மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகளும், 100 பயனாளிகளுக்கு ரூ.12,90,500 மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளும், 20 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளும் என மொத்தம் 238 பயனாளிகளுக்கு ரூ.47,54,915 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.32,051 மதிப்பீட்டில் விலையில்லா சலவைபெட்டிகளும், 5 பயனாளிகளுக்கு ரூ.21,896 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களும், முஸ்லிம் மகளிர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 100 முஸ்லிம் மகளிருக்கு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் சிறு தொழில் கடன் உதவித் தொகைக்கான காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளது.


மகளிர் திட்டம் சார்பில் 244 உழைக்கும் மகளிருக்கு ரூ 61 லட்சம் மானியத்தில் அம்மா இருசக்கர வாகனங்களும், 10 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் சுழல் நிதிக்கான காசோலைகளும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 39 பயனாளிகளுக்கு ரூ.2,03,499 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், வோண்மைத்துறையின் சார்பில் 51 பயனாளிகளுக்கு 25,600 மானியத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3,50,834 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 687 பயனாளிகளுக்கு ரூ.1,24,88,795 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயி என்பதால் பொதுமக்களின் கஷ்டங்களை உணர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே தமிழக அரசின் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் இதனை உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜநாயகம், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, வேளாண் இணை இயக்குநர் சுப்பையா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செல்வம், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அருணாசலம், வருவாய் கோட்டாட்சியர் குணசேகர், வட்டாட்சியர் சூரியபிரபு மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments