8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை உதவித் தொகை: NMMS தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்



எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு இன்று முதல் 26.09.2019 (வியாழக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்குநர் உஷாராணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:  தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

உதவித்தொகை வழங்க மாணவர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு  வரும் 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை NMMS தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்வுக்கான  விண்ணப்பங்களை இன்று 26.09.2019 முதல் வரும் 11.10.2019 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம்  16.10.2019- ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தகுதியுடையோர்:  

1. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி,  நகராட்சி, அரசு உதவிபெறும் பள்ளி) நிகழ் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் பெற்றோரின் குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

2. 2018-19-ஆம் கல்வியாண்டு ஏழாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும்,  மற்ற பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  1. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.  
  2. தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்ய வேண்டும். 
  3. புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தேர்வர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50-ஐ செலுத்தி அக்டோபர் 16-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். 
  4. தேர்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும். 

தேர்வு முறை மற்றும் நேரம்:
NMMS தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது.  பகுதி-1-இல்  மனத்திறன் படிப்பறிவுத் தேர்வு (Mental Ability Test-MAT) காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறும்.  பகுதி 2-இல் படிப்பறிவுத் தேர்வு , (www.dge.tn.gov.in)  காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

மேலும் முழு விபரம் தெரிந்து கொள்ள: http://www.dge.tn.gov.in/docs/Otherexam/NMMS_2019_PR_250919.pdf

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments