புதுக்கோட்டை மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் 8 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு



புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் மூலம் மானாவாரி நிலங்களில் பனைமரம் வளர்க்க விலையில்லா பனை விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
பனையின் வேர்கள் செங்குத்தாக இறங்கி நிலத்தடி நீர்வழிப்பாதையை தேடி செல்லும் தன்மையுடையது. மேலும் தனது வேரை குழல் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை உறிஞ்சி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் தன்மையுடையது.

இதனால் தான் நமது முன்னோர்கள் ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளின் கரையோரங்களில் பனை மரங்களை நட்டு வளர்த்து வந்தனர். இதனால் மண் அரிமானம் தடுக்கப்படுகிறது. ஒரு வறண்ட நிலத்தை காலப்போக்கில் நீர்வளம் கொண்ட நிலமாக மாற்றும் சக்தி பனை மரத்திற்கு உண்டு. நன்கு வயது முதிர்ந்த ஒரு பனை மரத்தில் இருந்து ஒரு ஆண்டில் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை வருமானம் ஈட்ட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் 400 முதல் 500 பனை மரங்களை வளர்த்து ஆண்டுக்கு ரூ.12 முதல் ரூ.15 லட்சம் வருமானம் ஈட்ட முடியும். மேலும் பனை பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அன்னிய செலவானியையும் ஈட்டலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்க திட்டத்தில் 16 ஆயிரம் எக்டர் மானாவாரி நிலங்களில் எக்டர் ஒன்றுக்கு 50 பனை விதைகள் வீதம் சுமார் 8 லட்சம் தரமான பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளின் பட்டா நிலங்களின் வரப்பு ஓரங்கள், பயிர் சாகுபடி செய்ய இயலாத நிலங்கள், நீர்ப்பாசன வாய்க்கால்கள், ஏரி கரைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் பனை விதைகள் நடவு செய்யலாம்.

கடின மண்ணில் பனை விதைகளை 2 அடி ஆழம் மற்றும் 1 அடி விட்டம் குழி எடுத்து, ஒரு குழிக்கு 2 விதைகள் வீதம் விதைத்து உரிய முறையில் பராமரித்தால் 21 நாட்களில் முளைத்து 5 முதல் 6 மாதங்களில் முதல் இலை மண்ணுக்கு வெளியே வரும். மானாவாரி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் வருவாய் கிராமங்களில் தேர்வு செய்யப்பட்டு உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments