புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்க 104-ஐ தொடர்பு கொள்ளலாம்...தற்கொலை எண்ணத்தைத் தடுப்பதற்கு கட்டணமில்லா மன நல ஆலோசனை சேவை எண் 104-ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

செப்டம்பர் 10 ஆம் தேதி  உலகத்  தற்கொலைத் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

மக்கள் நல்வாழ்வுத் துறையின்  கீழ், மாவட்ட மன நலத்திட்டம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.

தன்னைத்தானே காயப்படுத்தி கொள்ளுதல், வாழ்க்கையில் பாரமாக வாழ்வதே வீண் என்ற எண்ணம், வெறுமையாக உணர்தல், தற்கொலை எண்ணங்கள், மன அழுத்தம், கவலை ஆகிய எண்ணங்கள் இருந்தால் உடனடியாக 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இதில் உரிய மன நல ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

மேலும் தற்கொலை முயற்சி செய்து மீண்டு வந்தவர்களுக்கு மாதந்தோறும் 104-ல் இருந்து அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தொடர்ச்சியான ஆலோசனைகளை வழங்குவர்.

தற்கொலை எண்ணங்களால் பாதிக்கப்பட்டவர் எத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்கிறார் என்பது குறித்து கண்டறிந்து மன நல ஆலோசனை வழங்கப்படுவதுடன் தொடர்ந்து 18 மாதங்களுக்கு இத்தகைய மன நல ஆலோசனைகள் இலவசமாகவும் வழங்கப்படும்.

மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் மாவட்ட மன நல மையத்தின் மூலம் 247 நபர்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், தேவையான நபர்களுக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 மேலும் இதுகுறித்து ஆலோசனைகளை பெற மாவட்ட அரசு மன நல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகத்தை 94860 67686 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments