புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்புச் செய்யும் விவசாயிகளுக்கு உழவு மானியம்: கலெக்டர் தகவல்நேரடி நெல் விதைப்புச் செய்யும் விவசாயிகளுக்கு உழவு மானியம்
வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளபடி புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நேரடி நெல் விதைப்புச் செய்து நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உழவு மானியமாக 50 சதம் அல்லது ஏக்கருக்கு ரூ.600 வீதம் மானியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு முழுவதுமுள்ள நீர்ப் பற்றாக்குறையைச் சமாளித்து நீர்ச் சிக்கனம்
மற்றும் நீர் மேலாண்மையைச் செயல்படுத்தும் விதமாக நேரடி நெல் விதைப்புச் செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக உழவுப் பணிக்கு ஏற்படும் செலவில் 50 சதம் அல்லது ஏக்கருக்கு ரூ.600 இதில் எது குறைவோ அதனை விவசாயிகளுக்குப் பின்னேற்பு மானியமாக வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் 30,000 எக்டர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு
மூலம் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நேரடி நெல் விதைப்புப்
பரப்பினை அதிகரித்திடும் வகையில் உழவு மானியம் வழங்கிடத்
திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நேரடி விதைப்பின் மூலம் நெல் சாகுபடி செய்வதால் குறைந்த அளவிலான நீர், விதைகள் மற்றும் வேளாண் இடுபொருட்களைப் பயன்படுத்துவதுடன் நாற்றங்கால் அமைக்கும் செலவு, நடவுச் செலவு ஆகியவற்றைக் குறைத்து கூடுதல் மகசூல் பெற்று அதிக வருமானம் பெற முடியும்.

 மேலும் நடவுப் பயிரைவிட 10 நாட்கள் முன்னதாகவே அறுவடை செய்யவும்
முடியும். இத்திட்டமானது தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 50000 ஏக்கர் பரப்பளவில் நடப்பாண்டில்
செயல்படுத்திட ரூ.300 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எனவே,
இத்திட்டத்தில் சிறு, குறு மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை  வழங்கப்படுவதுடன், குத்தகை விவசாயிகள் உரிய வருவாய்த் துறைச் சான்றுகளைப் பெற்றுப் பயனடையலாம்.

உழவுப் பணிக்கான மானியத் தொகையைப் பெற விரும்பும் விவசாயிகள் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்துடன் ஆதார் நகல், நில ஆவணங்கள், வங்கிக் கணக்குப் புத்தக நகல் மற்றும் உழவு செய்தபோது விவசாயியுடன் எடுத்த புகைப்படம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு, வேளாண்மைத் துறை அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுப் பின்னேற்பு மானியம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.

எனவே அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, அரிமழம்
உள்ளிட்ட அனைத்து வட்டார விவசாயிகளும் இத்திட்டத்தில் பங்கு பெற்றுப்
பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments