புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்டோவில் அதிகமாக மாணவர்களை ஏற்றி செல்லும் டிரைவருக்கு சிறை தண்டனை..!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகளவில் மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விலை மதிப்பில்லாத மனித உயிரின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு தமிழக அரசால் போக்குவரத்து துறையின் மூலம் சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. மேலும், ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவத்தினை இருசக்கர வாகன ஓட்டிகள் படிப்படியாக உணர்ந்து வருகின்றனர். ஆட்டோ வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவான பெரியவர்கள் எனில் 3 பேர் மட்டும் அல்லது சிறியவர்கள் எனில் 5 பேர் மட்டும் ஏற்றி செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதிகளவில் பள்ளி குழந்தைகளை அமர வைத்து வாகனம் ஓட்டியை கண்டுபிடிக்கப்பட்டால், இதற்கு முன் அபராத தொகை விதிக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது, நீதிமன்ற உத்தரவின்படி அபராதத்திற்கு பதிலாக ஆட்டோக்களின் அனுமதி ரத்து செய்யப்படும். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளை நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் ஏற்றி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமர வைத்து அபாயகரமான வகையில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இதனை மீறும் ஓட்டுனர்களுக்கு ஓராண்டு வரை சிறையும், ரூ.5 ஆயிரம் வரை அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இது தவிர ஓட்டுனர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஓட்டுனர் பயிற்சிக்கு செல்ல வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விபத்துகளை குறைத்திடவும், சாலை பாதுகாப்பிளை உறுதி செய்திடவும் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மேற்குறிப்பிட்ட உரிய விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது, குடிபோதையில் வாகனத்தை ஓட்டுவது போன்ற விபத்துக்கு வழிகோலும் விதிமீறல்களை முற்றிலும் தவிர்த்து சாலை பாதுகாப்பினை உறுதி செய்ய வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments