புதுக்கோட்டையில் அரசு சார்பாக சைக்கிள் பந்தயம்புதுக்கோட்டை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு 24.09.2019 அன்று காலை 7.00 மணிக்கு அண்ணா விரைவு மிதிவண்டி பந்தயம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது.

காலஞ்சென்ற முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் அண்ணா விரைவு மிதிவண்டி பந்தயம் 24.09.2019 அன்று காலை 7.00 மணிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், புதுக்கோட்டை மாவட்ட பிரிவின் சார்பில் கீழ்கண்டுள்ளபடி புதுக்கோட்டை மாவட்ட மிதிவண்டி கழகத்துடன் இணைந்து நடத்தப்படவுள்ளது.

  • 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, 15 கி.மீ. தூரமும்.
  • 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, 20 கி.மீ. தூரமும்.
  • 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும். 
  • 13 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு , 10 கி.மீ. தூரமும்.
  • 15 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு , 15 கி.மீ. தூரமும். 
  • 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும்.

அண்ணா விரைவு மிதிவண்டி பந்தயம் நடத்தப்பட உள்ளது. மேலும் இந்த அண்ணா விரைவு மிதிவண்டி பந்தயம் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை அண்டக்குளம் பிரிவு விளக்கு ரோடு - தஞ்சாவூர் - திருச்சி பைபாஸ் சாலை - மருத்துவக்கல்லூரி சாலை அருகிலிருந்து துவங்கப்படவுள்ளது.

போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்று 24.09.2019 அன்று காலை 6.00 மணிக்கு போட்டிகள் துவங்க உள்ள  புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை அண்டகுளம் பிரிவு விளக்கு ரோடு சாலைக்கு வந்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.

போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர் தங்கள் சொந்த செலவில் மிதிவண்டியினை கொண்டு வருதல் வேண்டும். இந்தியாவில் தயாரான மிதிவண்டிகள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட வேண்டும். அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட மிதிவண்டியினை பயன்படுத்துதல் கூடாது. சாதாரண கைப்பிடி (Handle Bar) கொண்ட மிதிவண்டியாக இருத்தல் வேண்டும்.

மாணவ, மாணவியர்கள் போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வயதுச் சான்றுடன் வருதல் வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ள நுழைவுக் கட்டணம் இல்லை.

போட்டியில் பங்கேற்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும். மேலும் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார். 

Post a comment

0 Comments