எந்த வங்கியில் கணக்கு இருந்தாலும் இனிமேல் தபால் நிலையங்களில் பணம் எடுக்கலாம்எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் இனிமேல் தபால் நிலையங்களில் பணம் எடுக்கலாம். இந்த புதிய சேவை அமலுக்கு வந்துள்ளது.

தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 1 கோடி தபால் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் மட்டும் 3 லட்சத்து 98 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

கடந்த மாதம் வரை தபால் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே தபால் வங்கி சேவையை பெறும் நிலை இருந்தது. ஆனால் தற்போது இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதாவது எந்த வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் அவரது வங்கிக்கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருந்தால் அவர் இனிமேல் தபால் வங்கிகளில் அதாவது தபால் நிலையங்களில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அங்கு பணம் எடுக்கலாம்.

இந்த புதிய வசதி கடந்த 1-ந்தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை டெல்லியில் நேற்று நடைபெற்ற தபால் வங்கியின் ஓராண்டு நிறைவு விழாவில் மத்திய சட்டம் மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர்பிரசாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அப்போது பேசிய அவர், ‘தபால் வங்கி சேவையில் இந்த ஓராண்டில் நாடு முழுவதும் 1 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. எனவே அடுத்த ஓராண்டில் தபால் வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கை 5 கோடியாக உயர்த்த வேண்டும்’ என்றார்.

ஓராண்டு நிறைவையொட்டி, தபால் வங்கி சேவையை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் விருதுகளை வழங்கினார். இதில் ஊழியர்களின் சிறந்த செயல்பாட்டுக்காக (கோன் பனேகா பாகுபலி) இந்திய அளவில் முதல் இடத்துக்கான விருதை தமிழகம் பெற்றது. அதைப்போல ‘டிஜிட்டல் கிராமம்’ திட்டத்தில் 3-வது இடத்துக்கான விருதையும் தமிழகம் பெற்றது.

இந்த விருதுகளை தமிழக தலைமை தபால்துறை தலைவர் சம்பத் தலைமையிலான குழுவினர் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் தபால்துறை செயலாளர் அனந்த் நாராயண்நந்தா, தபால் வங்கி நிர்வாக இயக்குனர் சுரேஷ் சேத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Post a comment

0 Comments